முதலியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விரைவில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் பள்ளியை நேரில் ஆய்வு செய்து கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள, முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், சீட்டு கொட்டகைகளிலும், மர நிழலிலும், தரையிலும், அமர்ந்து மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். எனவே உடனடியாக கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், “பெற்றோர்கள் பள்ளியில் குடியேறும் போராட்டம்” அறிவிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில், கோட்டாட்சியர் லாவண்யா, வட்டாட்சியர் மணிகண்டன், ஆகியோர் முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தனர். காதி கிராம சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்றித் தருமாறும், அந்த இடத்தில் கட்டிடம் கட்டித் தருமாறும் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்று, நிலம் சம்பந்தமாக மதிப்பீடு செய்து, ஒரு மாத கால அவகாசத்திற்குள் காதி கிராம சங்கத்தில் இருந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு இடத்தை பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தனர். இடம் சம்பந்தமான பணிகள் முடிவடைந்ததும், கட்டிடங்களை கட்டித் தருவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அப்போது வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், சர்வேயர் காளிராஜ், சிஐடி போலீசார் முருகன், முத்துவேல், ஆகியோர் உடன் இருந்தனர். விரைந்து நடவடிக்கை எடுக்க உதவிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், போராட்டத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைப்பதாகவும், சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.