தென்காசி-செங்கோட்டை இடையே இரட்டை அகல ரயில் பாதை; தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்..

தென்காசி-செங்கோட்டை இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைத்திட வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நெல்லை ரயில் நிலையத்தில் 20.09.24 மாலை 6.30 மணிக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங், நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பின் போது, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், நெல்லை – தென்காசி இடையே உள்ள பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பை, கல்லிடை, சேரன்மகாதேவி, நெல்லை டவுன் ஆகிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும்.

நெல்லை டவுன் ரயில் நிலையத்தை கிராசிங் நிலையமாக மாற்றி ரயில் முனையமாக மாற்ற வேண்டும். நெல்லை சந்திப்பு மற்றும் நெல்லை டவுன் இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்க வேண்டும். தென்காசி ரயில் நிலையத்தில் பைபாஸ் லைன் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். தென்காசி ரயில் நிலையத்தில் நீர் ஏற்றும் வசதி ஏற்படுத்தி ரயில் முனையமாக மாற்ற வேண்டும். தென்காசி – செங்கோட்டை இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்க வேண்டும். தென்காசி பகவதிபுரம் இடையே ரயில்களின் வேகத்தை 110 ஆக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

மேலும் செங்கோட்டை – நெல்லை காலை ரயில் மற்றும் நெல்லை – செங்கோட்டை மாலை ரயில் ஆகியவற்றில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். செங்கோட்டை மயிலாடுதுறை மற்றும் செங்கோட்டை ஈரோடு ரயில்களில் முன்பதிவுடன் கூடிய இருக்கை வசதி மற்றும் குளிர் சாதன பெட்டிகளுடன் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்க வேண்டும். தென்காசி வழியாக கொல்லம் – நெல்லை காலை மற்றும் மாலை நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். தென்காசி வழியாக மும்பை மற்றும் டெல்லிக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ரயில் கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!