தென்காசி மாவட்டத்தில் நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதிகளை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் எனவும், ராமநதி, கடனாநதி நீரோடைகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திற்குள் அமைந்திருக்கும் கடையம் யூனியன் சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகையை உள்ளடக்கிய பகுதியாகும். இதில் 23 ஊராட்சி மன்றங்களும் ஒரு பேரூராட்சியும் அமைந்துள்ளது.
இந்த பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் பாய் தயாரிப்பு தொழில் அமைந்திருந்தது. தற்போது விவசாயம் மற்றும் பாய்த்தொழில் நலிவடைந்த காரணத்தினால் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு சென்று வேலைகள் செய்தும், தொழில்கள் செய்தும், பிழைத்து வருகின்றனர் ராமநதி அணையின் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடையம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
ராமநதி, கடனாநதி அணைகள், நீரோடைகள், தென்காசி சுற்று வட்டார, உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு சுற்றுலா தலமாக உள்ளது. கடையம், தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குளிக்க வந்து செல்கின்றனர். மேலும், இந்த அணையின் மேல் பகுதியில் உள்ள நீரோடையில் குளிக்கலாம். அதே நேரத்தில், நீரோடையின் மேல் பகுதியிலும், அணையின் உட்பகுதியிலும், குளிப்பதற்கு தடை என நீர்வளத்துறை, வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால, வெள்ளப்பெருக்கு சம்பவத்திற்கு பிறகு, தற்போது அணைகள் பூட்டப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள், நீரோடைகளில் குளிக்க வந்து, ஏமாந்து செல்கின்றனர். தென்காசி மாவட்டத்தில் கடையம் யூனியன் பகுதி மட்டும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையாத, பின்தங்கிய பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி பொருளாதாரம், வளர்ச்சி அடையும் வகையில், இந்த இரு அணைகளையும் சுற்றுலாத்தலமாக அரசு அறிவித்து, நீரோடைகளில் குளிப்பதற்கும், அணைகளை கண்டு ரசிப்பதற்கும், அரசு ஆவண செய்ய வேண்டும்.
அணையின் மேல் பகுதியில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளை ரசிக்க முடியும். சீசன் நேரங்களில் அணையில் தண்ணீர் நிரம்பி இருக்கும் அழகோடு, மேற்கு தொடர்ச்சி மலையையும் ரசிப்பது இன்னும் அற்புதமான உணர்வை கொடுக்கும். அணைகளுக்கு செல்லக்கூடிய சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது. எனவே அந்த சாலைகளையும் புதிதாக அமைத்துத்தர வேண்டும். அணைகளுக்கும், நீரோடைகளுக்கும் வரும் சுற்றாலாப் பயணிகளுக்கு பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும்.
மேலும் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரில் குளிப்பதற்கு அனைத்து பகுதியில் இருந்தும் அதிக மக்கள் வருகை தருவார்கள். மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை நேரங்களை தவிர்த்து, மற்ற நேரங்களில் இந்த அணைப்பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீரில் குளிப்பதற்கு மிகவும் பாதுகாப்புடையதாகும். இதனை சுற்றுலாத்தலமாக அறிவிக்கும் பட்சத்தில், வியாபார ஸ்தலங்கள் பெருகும். பொருளாதார சுழற்சி ஏற்படும். கடையம் வட்டாரம் வளர்ச்சி அடையும். எனவே இதனை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவருமான கட்டி அப்துல் காதர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.