உயிர் பலி வாங்க துடிக்கும் ஆபத்தான மெகா பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக சரி செய்திட வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள, திருமலையப்பபுரத்தில், தென்காசி அம்பாசமுத்திரம் சாலையில், வெங்கடாம்பட்டி விலக்கு, ரவண சமுத்திரம் விலக்கு என நான்கு சாலைகள் பிரியும் பகுதி உள்ளது. இதில் வெங்கடாம்பட்டி செல்லும் சாலை கடையம் யூனியனுக்கு சொந்தமானதாகும். இந்த சாலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான மெகா பள்ளத்தில் அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் விழுந்து விபத்துகளுக்கு உள்ளாகிறது.
இந்த சாலையில் நுழையும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த பள்ளத்தில் விழுந்து திடீரென நின்று விடுவதால், பிற மூன்று பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் திடீரென பிரேக் பிடிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த சாலை ஏற்கனவே மேட்டு பகுதியாக இருப்பதால், நான்கு சக்கர வாகனங்களில் உள்ள, பின் சக்கரங்கள் மாட்டிக் கொண்டு, முன்சக்கரங்கள் தூக்கி நிற்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளதாகவும், சாலையில் உள்ள இந்த பள்ளத்தில் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்படும் முன்பு உடனடியாக அதிகாரிகள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.