ரவண சமுத்திரம் ரயில் நிலைய அதிகாரியாக தமிழர் நியமனம் செய்யப்பட்டதற்கு சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் ரயில்வே மேலதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ரவணசமுத்திரம் ரயில் நிலையத்தை, ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், வீராசமுத்திரம், மந்தியூர், தர்மபுரம் மடம், கோவிந்தப்பேரி, வாகைகுளம், நாணல்குளம், முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், உள்ளிட்ட பல கிராம மக்கள், ரயில் பயண தேவைகளுக்காக, பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ் தெரியாத நபர், ரயில் நிலைய அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்ததால் முன்பதிவு டிக்கெட்டுகள், தட்கல் டிக்கெட்கள் பெறுவதில் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். தமிழ் வாசிக்கத் தெரியாத காரணத்தினாலும், பெயர்களை புரிந்து கொள்ள முடியாத காரணத்தினாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் உள்ளூர் மக்களே வெளியூர் சென்று டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே ரவணசமுத்திரம் ரயில் நிலையத்திற்கு, தமிழர் அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும் என்று சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த முத்து மணி என்பவர் நிலைய இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர், சேவாலயா பொறுப்பாளர் சங்கிலி பூதத்தான், ஹயாத், தாதாபீர், அக்பர் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ரவணசமுத்திரம் ரயில் நிலைய அதிகாரியாக தமிழர் நியமிக்கப்பட்டதற்கு மேலதிகாரிகளுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.