தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு மற்றும் போதைப் பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு கூட்டத்தின் துவக்க உரையாக மாநில செயலாளர் காரைக்கால் யூசுப் இறையச்சம் குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து மேலாண்மை குழு தலைவர் சம்சுல்ஹா ரஹ்மானி, மாநில தலைவர் அப்துல் கரீம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



இதில் மாநிலச் செயலாளர்கள் அன்சாரி, செங்கோட்டை பைசல், தாவூத் கைசர், யூசுப் அலி, சபீர் அலி, மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து மாவட்ட நிர்வாகிகளான மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட தலைவர் அப்துல்சலாம், செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் அன்வர் சாதிக், துணைத் தலைவர் அப்துல் பாசித், துணைச் செயலாளர் புளியங்குடி பிலால், செங்கை காஜா, கடையநல்லூர் அப்துல் பாசித் ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
இறுதியில் செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
போதை ஒழிப்பு நடவடிக்கைகள்: இந்தியா முழுவதும் போதை பொருள்களின் நடமாட்டம் பெருமளவில் அதிகரித்துள்ளது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்றிய, மாநில அரசுகள் வேடிக்கை மட்டும் பார்க்காமல் போதை பொருள் விநியோகத்தில் ஈடுபடுவர்களின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை கொண்டு வருவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இம்மாநில செயற்குழுவின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
அரசியலமைப்புக்கு எதிரான பேச்சுக்கள்: ஆளும் ஒன்றிய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் ஷர்மா, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் சமீப காலமாக அரசியலமைப்புக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகின்றனர். ஆட்சியின் குறைபாடுகளை மறைக்க இஸ்லாமியர்கள் பற்றி பேசுவது பாஜகவின் வழக்கம் தான் என்றாலும், இஸ்லாமிய சமூக மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியில் இருக்கும் நிதிஷும், சந்திரபாபு நாயுடுவும் இவர்களின் சர்ச்சை பேச்சை கண்டிக்க வேண்டும் என்று இந்த மாநில செயற்குழுவின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
வங்கதேச வன்முறை: வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறை மற்றும் ஊரடங்கில் நூற்றுக்கணக்கான தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். MBBS உள்ளிட்ட படிப்புகளை படிக்க சென்றுள்ள மாணவர்கள் காலவரையற்ற கல்லூரி விடுமுறையால் டாக்காவுக்கு அருகில் உள்ள மிம்மின்சிங் (Mymminsing) Community based Medical college உள்ளிட்ட பல பகுதிகளில் மாட்டிக் கொண்டுள்ளனர். அந்த மாணவர்களை மீட்டுக்கொண்டு வருவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் அவர்கள் விரைவுப்படுத்துவதோடு அவர்களின் வருங்காலப் படிப்பையும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மாநில செயற்குழுவின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
நிர்வாக சீர்கேடுகள்: நீட் வினாத்தாள் கசிந்தது, தொடர் ரயில் விபத்துகள், என மோடி ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகள் மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கின்றன, இலட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவர் கனவுகளில் மண்ணள்ளி போட்டுள்ளதோடு, கடந்த சில மாதங்களில் நடந்துள்ள ரயில் விபத்துக்களில் நூற்றுக் கணக்கானோரின் உயிரையும் பறித்துள்ளது மோடி அரசு, இந்த நிர்வாக சீர்கேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சரும், ரயில்வே அமைச்சரும் ராஜினாமா செய்ய வேண்டும் என இந்த மாநில செயற்குழுவின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
இஸ்ரேலின் அடக்கு முறைகள்: காஸா மண்ணில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வரும் பாலஸ்தீனியர்களின் வாழ்க்கை கடும் வேதனையை ஏற்படுத்துகிறது. அந்த மண்ணில் நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இம்மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. போரை நிறுத்துவதற்கான சர்வதேச அழுத்தத்தை இந்திய அரசு தர வேண்டும் என இம்மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
வெள்ளை அறிக்கை வெளியிடுக: தமிழகத்தில் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 3.5 இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியர்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசை இந்த மாநில செயற்குழுவின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துக: தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அந்த அடிப்படையில் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை குறைந்த பட்சம் ஏழு சதவீதம் அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசை இந்த மாநில செயற்குழுவின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.