தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் 354 அரசு பள்ளிகளில் 1 முதல் 5 வரை பயிலும் 17,349 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
தற்போது 15.07.2024 முதல் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார். மாணவ மாணவியரின் கற்றல் திறன் மேம்பட செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் 354 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 23,028 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான காலை உணவு வழங்கப்படும். திங்கள் கிழமை அன்று ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை அன்று கோதுமை உப்புமா, காய்கறி சாம்பார், புதன்கிழமை வெண்பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார் ஆகிய உணவு வகைகள் மாணவ மாணவியருக்கு வழங்கப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தின் தொடக்க விழாவில் நாளை (15.07.2024) தென்காசி வட்டாரம், மத்தளம்பாறை ஊராட்சி விவேகானந்தா நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் A.K.கமல் கிஷோர் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் .பழனி நாடார், குருவிகுளம் டிடிடிஏ பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா, அரியநாயகிபுரம் இந்து நாடார் உறவின் முறை பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.சதன் திருமலை குமார் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.