கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சிக்குட்பட்ட ஆவுடையானூர், பொடியனூர், சின்னநாடானூர், சாலடியூர், கோட்டை விளையூர் ஆகிய பகுதிகளில் 15 முதல் 25 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சீரான குடிநீர் வழங்கக் கோரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஸ்வரி முருகன், வார்டு உறுப்பினர்கள் தலைமையில் பொதுமக்கள் பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலறிந்த பாவூர்சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கல்யாண ராமசுப்பிரமணியன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், வார்டு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களுக்கு எழுத்து பூர்வமாக பதிலளிக்க கேட்டுக்கொண்டனர். இதையடுத்து திங்கள் கிழமை ஆவுடையானூர் ஊராட்சிக்கு வருகை தந்து, ஆய்வு செய்து சீரான குடிநீர் கிடைத்திடவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். குடிநீர் விநியோகம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் குத்தாலிங்கராஜன் கூறியதாவது, ஆவுடையானூர் ஊராட்சிப் பகுதி பொதுமக்களுக்கு ராமநதி ஆற்றுப்படுகையில் உள்ள கிணறுகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ள நீரேற்றும் பம்பிங் லைனில் மின் மாற்றி பழுதடைந்துள்ளதாலும், குறைந்த வோல்டேஜ் இருப்பதாலும் குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.