தென்காசி மாவட்டத்தில் யானை மிதித்து தோட்ட காவலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், யானைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த குருவையா என்பவரின் மகனான மூக்கையா (வயது 60). சொக்கம்பட்டி பிள்ளையார் பாண்டி என்பவரது தோட்ட காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், மூக்கையா மற்றும் பிள்ளையார் பாண்டி உள்ளிட்ட 3 பேர் பிள்ளையார் பாண்டியன் தோட்டத்தில் இரவு நேரத்தில் தங்கி இருந்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் காவலாளியான மூக்கையா என்பவர் டார்ச் லைட் வைத்துக் கொண்டு தோட்டத்தில் காவல் பணிக்கு சென்ற நிலையில், மாந்தோப்பு பகுதியில் பெரிய யானை ஒன்று நின்றுள்ளது.
அதை கவனிக்காத மூக்கையா அதன் அருகே சென்ற நிலையில், யானையானது மூக்கையாவை கீழே தள்ளி அவர் மீது மிதித்துள்ளது. இதில் மூக்கையா சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். காவலாளி மூக்கையாவின் அலறல் சத்தம் கேட்டு தோட்டத்தில் இருந்த பிள்ளையார் பாண்டியன் ஓடி வந்து கூச்சலிட்டு யானையை அங்கிருந்து விரட்டியுள்ளார். இந்த நிலையில், இது தொடர்பாக வனத்துறையினருக்கு அவர் தகவல் கொடுத்த நிலையில், தகவலின் பேரில் கடையநல்லூர் வனத்துறையினர் மற்றும் சொக்கம்பட்டி போலீசார் உயிரிழந்த மூக்கையாவை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து விவசாய பயிர்களை அழித்து வரும் நிலையில், தோட்ட காவலாளியை மிதித்து கொன்ற இந்த சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், யானைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.