சங்கரன்கோவில் பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மறுவாழ்வு அளித்த தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் சாலையோரம் ஆதரவின்றி எந்தவித பராமரிப்பும் இன்றி சுற்றித் திரிவதாக சங்கரன்கோவில் கோட்டாட்சியர் மூலம் தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷூக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் உத்தரவின் பேரில், தென்காசியில் இருந்து பசியில்லா தமிழகம் அறக்கட்டளை குழுவினர் சங்கரன்கோவில் விரைந்து சென்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பசியில்லா தமிழகத்தின் பெண் தன்னார்வலர்கள் மூலமாக மீட்டெடுத்து சங்கரன்கோவில் நகர காவல் நிலைய ஆய்வாளரின் ஒப்புதல் கடிதம் பெற்று சங்கரன்கோவிலில் இருந்து தனி வாகனம் மூலமாக திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிஷப் சார்ஜன்ட் அன்பு இல்லத்தில் அனுமதித்தனர். அங்கு அந்தப் பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சைகள் செய்து உரிய கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.
சிகிச்சையின் முடிவில் அவரது குடும்பம் கண்டுபிடித்து குடும்பத்துடன் இணைக்கும் முயற்சியை அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காப்பாற்றப்பட்டு, பாதுகாப்பாக காப்பகத்தில் சேர்க்க உதவிய தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், சங்கரன்கோவில் கோட்டாட்சியர், சங்கரன் கோவில் நகர காவல் துறையினர் மற்றும் பசியில்லா தமிழகம் குழுவினரை பொதுமக்கள் பாராட்டினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.