சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் திட்ட முகாம் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாமினை துவக்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் திட்ட முகாம் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதை பார்வையிட்டார்.



இம்முகாமில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துறையின் மூலம் சங்கரன்கோவில் வட்டார பகுதியிலுள்ள 8 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.50 இலட்சத்திற்கான காசோலையினை சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவரும் தமிழ்நாடு முதலமைச்சரால் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற முன்னெடுப்பின் கீழ் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டியதை உறுதி செய்வது ஒவ்வொரு துறையின் பொறுப்பாகும் என கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைபடுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும், சென்று சேரும் வண்ணம் மற்றுமொரு மைல்கல்லாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் முதல்வரின் முகவரி துறையால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் இரண்டாம் கட்டமாக கிராம ஊரக பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, தென்காசி மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெற தென்காசி மாவட்ட 10 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 221 கிராம பஞ்சாயத்துக்களை ஒருங்கிணைத்து 51 சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியங்களான களப்பாகுளம், இராமநாதபுரம், வடக்குப்புதூர், வீரிருப்பு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கான மக்களுடன் முதல்வர் முகாமில் 246 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
மேலும், 19.07.2024 அன்று ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வாடியூர், குறிச்சாம்பட்டி, ஆர் நவநீத கிருஷ்ணாபுரம், மேலக்கலங்கல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு பரங்குன்றாபுரம் சமுதாய நலக்கூடத்திலும், கடையம் ஊராட்சி ஒன்றியம் கடையம், முதலியார்பட்டி, சேர்வைக்காரன்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடையம் பீம்சிங் திருமண மண்டபத்திலும். கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆணைக்குளம், குலையநேரி, பொய்கை, வேலாயுதபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் குலையநேரி சமுதாய நலக்கூடத்திலும், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் மேலப்பாவூர், கீழ வெள்ளக்கால், இராஜபாண்டி, இனாம், வெள்ளக்கால் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு மேலப்பாவூர் சமுதாய நலக்கூடத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
இம்முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் து.பெ.சுரேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.ராஜா (சங்கரன்கோவில்), மரு.சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லாலா சங்கரபாண்டியன், துணைத்தலைவர் செல்வி, சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதி இந்திரா பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மாரிமுத்து, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.கவிதா, சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, அலிஸ்தாயம்மாள், சங்கரன்கோவில் வட்டாட்சியர் பரமசிவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.