தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் தொடர் விபத்துகள் நிகழ்ந்து வருவதாகவும், இதனை தடுத்து மக்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடந்து வருவது கவலை அளிக்கிறது.
இந்த கனிமவள வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டுனர்கள் மது போதையிலும், மது அல்லாத சில போதை பொருட்களையும் பயன்படுத்துவதாக தெரிகிறது. காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி இதனை முற்றிலும் நிறுத்துவதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும். இந்த வாகனங்களை இயக்குபவர்கள் இரண்டு காதுகளிலும் இயர் போனை மாட்டிக் கொண்டு தான் வாகனத்தை இயக்குகிறார்கள். அப்படி இயர்போன் மாட்டிக் கொண்டு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இரவு பகலாக கல் குவாரிகள் இயங்குவதால் போட்டி போட்டுக் கொண்டு வாகனத்தை இயக்குகிறார்கள். இதனால் சரியான நேரத்திற்கு வாகன ஓட்டுனர்களால் தூங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஓட்டுநர்களின் தூக்க கலக்கத்தில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழப்பதினால் பல விபத்துக்கள் நடக்கிறது. சாலையில் பயணிக்க கூடிய பொதுமக்கள் இந்த கனிமவள கனரக வாகனங்களை பார்த்தாலே பயந்து நடுங்குகின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அளவுக்கு மீறி ஏற்றிச் செல்லும் கனிம வளங்களால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஆங்காங்கே கவிழும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த வாகனங்களால் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு செங்கோட்டை தென்காசி குடிநீர் திட்டத்தில் ஏறக்குறைய 50 இடங்களில் உடைத்து ஏற்பட்டு தண்ணீர் வீணாக சொல்கிறது. மேலும் அந்தத் தண்ணீரை பொதுமக்கள் குடிப்பதினால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது. ஆகவே மேற்கூறிய கருத்துக்களை ஆய்வு செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ரவி அருணன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.