மகமாயி பாட்டிக்கு மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் தன்னார்வலர்கள்; பொதுமக்கள் பாராட்டு..
செங்கோட்டை அருகே ஆதரவற்ற நிலையில், கால்களில் புழுக்கள் நிறைந்த புண்களுடன் சாலையோரம் வாழ்ந்து வந்த மகமாயி பாட்டியை மீட்டு மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் குழுவினரை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே சாலையோரம் ஆதரவு இல்லாமல் கால்கள் முழுக்க புண்களில் புழுக்கள் வைத்த நிலையில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மகமாயி என்ற பெண் வெயிலிலும் மழையிலும் நனைந்து கொண்டே இருந்துள்ளார். இது பற்றிய தகவல் அறிந்த பசியில்லா தமிழகம் குழுவினர், செங்கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் தென்காசி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று அந்த பெண்ணை மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தில் தொடர்ந்து பராமரித்து வருகிறார்கள். கால்கள் முழுவதும் புழுக்கள் நிறைந்த புண்கள் இருப்பதால் அனைத்தையும் முதலுதவி சிகிச்சை செய்து தினமும் செவிலியர்கள் உதவியுடன் கட்டுப்போட்டு வருகிறார்கள். புண்கள் ஆறுவதற்கு சுமார் 3 முதல் 6 மாத காலங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த மகமாயி பாட்டிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளதாகவும், ஒரு மகன் பெயர் ராம்குமார் என்றும் தென்காசி கூலக்கடை பஜாரில் கடை வைத்திருப்பதாகவும் கூறுகிறார். மற்றொரு மகன் பெயர் கணேஷ் என்றும் வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலையில் பணிபுரிவதாகவும், மகள் பெயர் செல்வி என்றும் கூறுகிறார். இந்நிலையில் பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பினர் அவரது குடும்பத்தினரை கண்டுபிடிக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த மகமாயிப் பாட்டியை பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக பசியில்லா தமிழகம் குழுவினரை 8883340888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பசி இல்லா தமிழகம் அமைப்பின் நிறுவனத் தலைவர் முகமது அலி ஜின்னா தெரிவித்துள்ளார். சாதி மத வேறுபாடின்றி ஆதரவற்ற சாலையில் இருந்த மகமாயி பாட்டியை சிகிச்சை கொடுத்து இன்று நல்ல நிலைமையில் வைத்திருக்கும் பசியில்லா தமிழகம் குழுவினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.