புளியங்குடி அருகே தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை; காவல்துறையினர் விசாரணை..
புளியங்குடி அருகே தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என். புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் உமாதேவி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் முதுகலை தாவரவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ரவிக்குமாரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உமாதேவி வெள்ளிக்கிழமை மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு அவரது கணவருடன் வந்துள்ளார். சாப்பிட்டு முடித்த பிறகு அவரது கணவரை நீங்கள் பள்ளிக்கு செல்லுங்கள் நான் பிறகு வருகிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரது கணவரும் பள்ளிக்கு சென்று விட்டதாகவும், நீண்டநேரம் ஆகியும் ஆசிரியை உமாதேவி வரவில்லை என்பதால் அவர் கணவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது சமையலறையில் ஆசிரியை உமாதேவி தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது கணவர் மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறியுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக வந்து காவல்துறையிருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினரும், அக்கம் பக்கத்தினரும் தூக்கில் தொங்கியபடி கிடந்த ஆசிரியை உமாதேவி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆசிரியை உமாதேவி மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கினாரா? இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த ஆசிரியை உமாதேவிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்தப் பள்ளியில் விலங்கியல் ஆசிரியையாக பணிபுரிந்த ஆசிரியை நிர்மல் ஷோபனா என்பவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், தனக்கு இது போல் மூன்று சம்பவம் நடைபெற்றதாகவும், வினாத்தாள் பேப்பரை வெளியில் லீக் செய்து விட்டதாக கூறியும், நிர்வாகத்தை ஒருமையில் பேசியதாக கூறியும் தன்னை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் இது பொய் என நிரூபிப்பதற்காக உயர்நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும், எனது பெயருக்கு கமிட்டி நிர்வாகம் களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்காகவே உயர் நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும், கமிட்டி நிர்வாகத்தை களங்கம் ஏற்படுத்துவதற்காக நான் நீதிமன்றம் செல்லவில்லை எனவும் அவர் பேசினார். மேலும், பள்ளி நிர்வாகம் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் தன்னை தற்காலிக பணி நீக்கம் செய்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி கல்வித்துறையிடம் புகார் செய்திருப்பதாகவும், இது போன்ற சம்பவங்கள் பல்வேறு பெண் ஆசிரியர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், தற்காலிக பணி நீக்க செய்யப்பட்ட ஆசிரியை குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து மன உளைச்சல் ஏற்பட்டால் இன்னும் பெண் ஆசிரியைகளின் தற்கொலைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனை தடுத்திட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









