கனிமவள வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்; தமுமுக-மமக வலியுறுத்தல்..
பொட்டல்புதூர் கடையம் வழியாக கேரளாவிற்கு கனிமவளம் கொண்டு செல்லும் ராட்சத கனரக லாரிகளால் விபத்துக்களும், போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டு வருவதால், கனிமவள லாரிகள் கடையம் பொட்டல்புதூர் சாலையை பயன்படுத்தாமல் மாற்றுப்பாதையில் செல்ல மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமுமுக-மமக கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட தமுமுக-மமக பொட்டல் புதூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் பொட்டல்புதூர் அலுவலகத்தில் மமக மாவட்ட செயலாளர் சலீம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமுமுக மாவட்ட பொருளாளர் முகமது பாசித், தமுமுக மாவட்ட துணை செயலாளர் பொட்டல் புதூர் சித்திக், சுற்றுப்புற சூழல் அணி மாவட்ட செயலாளர் ஜாபர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கோதர் மைதீன் வரவேற்றார். இதில் தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட் கான் கலந்து கொண்டு நிர்வாக தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கிளைத் தலைவராக மதார் மைதீன், தமுமுக நகர செயலாளராக முகம்மது ஜபருல்லாஹ், மமக நகரச் செயலாளராக பாபு, தமுமுக மமக நகர பொருளாளராக சாகுல்ஹமீது, துணைத் தலைவராக டிப்டாப் அப்துல் ரகுமான், தமுமுக மமக துணை செயலாளர்களாக முகமது பாசித், யூசுப், உமர் பாரூக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கடையம் ஒன்றிய தலைவர் மீரான் முகைதீன், மமக ஒன்றிய செயலாளர் பொட்டல் சலீம், தமுமுக ஒன்றிய செயலாளர் முதலியார்பட்டி அசார் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில், பொட்டல் புதூர் முதல் மாதாபுரம் செக்போஸ்ட் வரை உள்ள சாலையை ஒரு மாதா கால இடைவெளிக்குள் சீரமைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாபெரும் சாலை மறியல் நடத்தப்படும் என்றும், பொட்டல் புதூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தை மினி கிளினிக்காக மாற்ற வேண்டும் எனவும், பொட்டல்புதூர் கடையம் வழியாக கேரளாவிற்கு கனிமவளம் கொண்டு செல்லும் ராட்சத லாரிகளால் விபத்துக்களும் மிகுந்த போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்படுவதால், கனிமவள லாரிகள் கடையம் பொட்டல்புதூர் சாலையை பயன்படுத்தாமல் மாற்றுப்பாதையில் செல்ல மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் பொட்டல் சித்திக் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.