திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணி; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..

திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணி; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 18.06.2024 இன்று சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வுப்பணிகளை காணொளி காட்சி மூலமாக துவக்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவநல்லூர் திருமலாபுரம் கிராமத்தில் குலசேகரப்பேரி கண்மாய்க்கு மேற்கே (9° 17′ 48.05″N, 77°22′ 57.62 E) இத்தொல்லியல் மேடு அமைந்துள்ளது. திருமலாபுரம் மற்றும் உள்ளாரிலிருந்து மேற்காக 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. குலசேகரப்பேரி கண்மாய்க்கு மேற்கில் சாலை அமைப்பதற்காக மண் எடுக்கும் பொழுது ஏறக்குறைய நான்கு அடி ஆழத்தில் தொல்லியல் எச்சங்கள் வெளிக் கொணரப்பட்டன. இத்தொல்லியல் மேடானது சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் கற்பதுக்கை மற்றும் முதுமக்கள் தாழிகள் அமைந்துள்ளது.

இப்பகுதியில் வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட மட்கிண்ணங்கள் மற்றும் மூடிகளும், கருப்பு-சிவப்பு பானை, சிவப்பு நிற பானை, கருப்பு நிற பானை, மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை, ஈமத்தாழிகள் என அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளது. ஈமத்தாழியின் வெளிப்புறத்தில் இரண்டு சிறிய கூம்பு வடிவ புடைப்புகளும், அதன் கீழாக ஒரு வட்டத்திற்குள் இரண்டு கோடுகள் ஒன்றையொன்று குறுக்கிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஈமத்தாழியின் வெளிப்புறத்தில் இரண்டு சிறிய கூம்பு வடிவ புடைப்புகளுக்கு நடுவிலிருந்து மூன்று கோடுகள் தனிதனியாக பிரிந்து செல்லும் வகையிலும் அமைந்துள்ளது. ஒரு சிலத் தாழிகள் மண் தோண்டப்பட்ட குழிகளின் பக்கவாட்டில் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த தோற்றத்தைக் காணும் பொழுது தாழிகள் மண்ணில் புதைக்கப்பட்டு அதன் மேற்பகுதியில் கூழாங்கற்கள் பரப்பப்பட்டிருந்ததை அறியமுடிகிறது. சில மனித எலும்புகளும் கிடைத்துள்ளன. செம்பினாலானக் கிண்ணம், இரும்பினாலானப் பொருட்கள் (ஈட்டி, வாள், குறுவாள், கத்தி) போன்றவை முக்கிய தொல் பொருட்களாகும். குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள், மட்பாண்ட ஓடுகள் என அதிக எண்ணிக்கையில் கிடைக்கப் பெற்றுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர். ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர், சதன் திருமலைக்குமார், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்தையா பாண்டியன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சந்திரமோகன், திருமலாபுரம் அகழாய்வு இயக்குநர் க.வசந்தகுமார், அகழாய்வு பொருப்பாளர் த.காளீஸ்வரன், தென்காசி மாவட்ட தொல்லியல் அலுவலர் க.சக்திவேல், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.கவிதா, சிவகிரி வட்டாட்சியர் ரவிக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!