தென்காசி தனி தொகுதியில் வாக்கு எண்ணும் பணி; மாவட்ட கலெக்டர் முக்கிய தகவல்..

தென்காசி தனி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஜூன்.4 நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் பணி தொடர்பான முக்கிய தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 37 – தென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் யு.எஸ்.பி. கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஜுன் – 4 ஆம் தேதி காலை 8.00 மணிக்கு தொடங்குகிறது. தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தபால் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் தனியாக ஒரு அறையில் எண்ணப்படும். தபால் வாக்குகள் எண்ணப்படுவதற்கு 10 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதே அறையில் சேவை வாக்காளர்களிடமிருந்து மீள வரப்பெற்ற மின்னணு வாக்குச்சீட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்டு பின்னர் தபால் வாக்கு மேசைகளில் எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் அறையில் ஒவ்வொரு மேசைக்கும் ஒரு வாக்கு எண்ணுகை உதவியாளர், வாக்கு எண்ணுகை கண்காணிப்பாளர், ஒரு நுண்பார்வையாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் அறையில் வேட்பாளரின் பிரதிநிதியாக வாக்கு எண்ணுகை இடமுகவர் செயல்படவேண்டும். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேசைகள் மற்றும் 1 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேசை என மொத்தம் 15 மேசைகள் உள்ளன. அதன்படி ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரு வேட்பாளருக்கு 90 முகவர்களும் தபால் வாக்கு எண்ணும் அறையில் 12 முகவர்களும் ஆக மொத்தம் ஒரு வேட்பாளருக்கு 102 முகவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் தினத்தன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையானது சட்டமன்ற தொகுதி வாரியாக காலை 6.45 மணி முதல் ஒவ்வொன்றாக தேர்தல் பார்வையாளர், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்படும், காலை 8.00 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படும்.

தென்காசி மக்களவை தொகுதிக்குட்பட்ட 202 இராசபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்குகள் 19 சுற்றுகளிலும், 203 ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குகள் 21 சுற்றுகளிலும், 219 சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்குகள் 20 சுற்றுகளிலும், 220 வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்குகள் 20 சுற்றுகளிலும், 221 கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்குகள் 24 சுற்றுகளிலும் மற்றும் 222 தென்காசி சட்டமன்ற தொகுதி வாக்குகள் 24 சுற்றுகளிலும் எண்ணப்படும். வாக்கு எண்ணுகை முகவர்கள் பேனா/பென்சில், வெற்று காகிதம் மற்றும் வாக்கு சாவடி தலைமை அலுவலரால் அளிக்கப்பட்ட படிவம் 17சி நகல் ஆகியவற்றை மட்டுமே வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்ல வேண்டும். கைபேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு கருவிகளும் வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்துச் செல்லக்கூடாது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் முகவரும் அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட படிவம் 18, அவர்களது புகைப்படம் அடங்கிய அடையாள அட்டை மற்றும் எந்த சட்டமன்ற தொகுதியின் மேசைக்கு முகவராக நியமனம் செய்யப்பட்டதற்கான அடையாள பேட்ஜ் ஆகியவற்றை தன்னுடன் கொண்டு வரவேண்டும்.

காலை 6.00 மணி முதல் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். முகவர்கள் காலை 7.00 மணிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட சட்டமன்ற வாக்கு எண்ணும் மையத்திற்குள் வந்து விட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் அறைக்கு கொடுத்து அனுப்புவதற்கு வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒவ்வொரு மேசைக்கும் கொண்டு செல்வதற்கு தலா ஒரு பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கை விவரம் அந்தந்த வேட்பாளர் முகவர்களுக்கு வழங்கப்படும். அனைத்து கட்டுப்பாட்டு கருவிகளிலுள்ள வாக்குகளை எண்ணி முடித்த பின்பு ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 5 வாக்குச்சாவடிகள் வீதம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு காகித தணிக்கை சோதனை சாதனத்தின் (VVPAT) அச்சிடப்பட்ட காகித சீட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் எந்த மேசையில் வாக்குகளை எண்ணுவது என்பது குறித்து தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 5 மணிக்கு கணினி முறை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

வாக்கு எண்ணிக்கை செய்யப்படும் ஒவ்வொரு மேசையும் வெப் கேமரா வாயிலாக கண்காணிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிக்காக தென்காசி மக்களவை தொகுதிக்கு போதுமான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தினத்தன்று வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதிகள் மாவட்டத்தில் உள்ள பிரதான பகுதிகளில் காவல்துறை சார்பில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட இதர வசதிகளும் வாக்கு எண்ணுகை மையத்தில் விரிவான முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் தொடர்பான தகவல்களை வழங்கிட தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் தொடர்பான தகவல்களை பொது மக்கள் 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

தென்காசி மக்களவை தொகுதிக்குட்பட்ட இராசபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணியினை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தினால் அர்ச்சனா தாஸ் பட்நாயக் என்ற தேர்தல் பார்வையாளர் ஒடிசா மாநில குடிமைப்பணியிலிருந்தும், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணியினை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தினால் பொது பார்வையாளராக டோபேஸ்வர் வர்மா, என்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலரும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!