தென்காசி மாவட்டத்தில் “ஜீவன் ரக்ஷா பதக்” விருதுகள் வழங்கப்பட உள்ளது; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2024ஆம் ஆண்டிற்கான “ஜீவன் ரக்ஷா பதக்” விருதுகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், இந்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் “ஜீவன் ரக்ஷா பதக்” விருதானது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்காணும் மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
“சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்க” விருதானது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. “உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்க” விருதானது துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. “ஜீவன் ரக்ஷா பதக்க” விருதானது தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு பிறரின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தென்காசி மாவட்டத்தை சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து 2024 ஆண்டிற்கான ”ஜீவன் ரக்ஷா பதக்” விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதிற்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் இராணுவம், காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையில் பணியாற்றி உயிர் காக்கும் வீர தீர செயல் புரிந்தவர்களும் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். இவ்விருதானது 01.10.2022 பின் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இவ்விருதிற்கான விண்ணப்ப படிவமானது www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை புத்தக வடிவில் தயார் செய்து 3 எண்ணம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அலுவலகம், 163 அ, ரயில்வே ரோடு, தென்காசி-627811 என்ற முகவரியில் 29.06.2024 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அலுவலகம், 163 அ. ரயில்வே ரோடு, தென்காசி-627811 என்ற முகவரியில் நேரிலோ (அ) 04633 212580 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.