உலக சாதனை விருது பெற்ற 4 வயது சிறுமி; ஆலங்குளம் யூனியன் சேர்மன் பரிசுகள் வழங்கி பாராட்டு..
தென்காசி மாவட்டத்தில் உலக சாதனை விருதுகள் பெற்று தமிழ்மொழிக்கும் பெருமை சேர்த்த 4 வயது சிறுமியை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை கிராமத்தை சேர்ந்த மகாராஜா சுபா தம்பதியினர் மகள் அபர்ணா. 4 வயதான இந்த சிறுமிக்கு, பெற்றோர் சிறு வயது முதல் செல்போன் பயன்பாட்டை தவிர்த்து வந்துள்ளனர். இதனால் அச்சிறுமி 2 வயதாக இருக்கும் போதே 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 பூச்சிகள், 40 பறவைகளின் பெயர்களை கூறியும், அதே ஆண்டில் மே மாதம் 1 நிமிடத்தில் அதிகபட்ச உலக எதிர்சொற்களை கூறி விருதுகளை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் சான்றிதழ்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.



அதைத்தொடர்ந்து சூரிய குடும்பத்தின் கிரகங்கள், விலங்குகள், எதிர் வார்த்தைகள், இந்திய நதிகள், காட்டு விலங்குகள் உள்ளிட்ட 40 விதமான தலைப்புகளில் பேசி, கடந்த மார்ச் 2023ஆம் ஆண்டு கலாம் உலக வார்த்தைகளுடன் கூடிய எழுத்துக்களை 41 நொடிகளில் கூறியும், ஜூன் 2022ஆம் ஆண்டு மிக எண்ணிக்கையிலான நினைவாற்றல் செயல்பாடுகளை படிக்கும் முதல் இளைய குழந்தை என்ற டிரைம்ப் உலக சாதனை விருதும் இச்சிறுமிக்கு கிடைத்துள்ளது. இதேபோல் அபர்ணா கடந்த மார்ச் 7ஆம் தேதி 7 நிடத்தில் 500 எதிர் வார்த்தைகளுக்கு விரைவாக பதிலளித்து இண்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு சான்றிதழ் பெற்று சாதனை படைத்தார்.
இது தவிர மாநில அளவிலான பேச்சு போட்டியில் இளம் தமிழ் பேச்சாளர் 2024ஆம் ஆண்டு விருதையும் இளம் வயதில் பெற்று அசத்தியுள்ளார் அபர்ணா. இச்சிறுமியின் திறமையை அறிந்த ஆலங்குளம் யூனியன் சேர்மனும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளருமான எம். திவ்யா மணிகண்டன் சிறுமி அபர்ணாவை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து சைக்கிள் பரிசாக அளித்து பாராட்டினார். இந்நிகழ்வில் தொழிலதிபர் மணிகண்டன், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.