குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி; குடிபோதையில் குளிக்க அனுமதி இல்லை; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..
குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி குளிப்பதற்கான தடை விலக்கப்பட்டுள்ளதாகவும், குடிபோதையில் அருவிகளில் குளிக்க அனுமதி இல்லை எனவும் தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அருவிகளில் குளிக்க செல்லும் போது சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், குற்றால அருவிகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்பதால் குற்றாலத்திலுள்ள பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி மற்றும் இதர அருவிகளில் பெரு வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கருதி மேற்கண்ட அருவிகள், அணை பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்திலுள்ள இதர சுற்றுலா பகுதிகளில் பொது மக்கள் குளிப்பதற்கு ஏற்கனவே தடை செய்து ஆணையிடப்பட்டது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு சென்னை வானிலை மைய அறிவிப்பில் மிக கனமழை எச்சரிக்கை ஏதும் இல்லாததால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி 23.05.2024 முதல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடைகளை விலக்கி கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், பிரதான அருவி பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 24.05.2024 இன்று பிற்பகல் 4.00 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படும். பழைய குற்றால அருவியில் 24.05.2024 முதல் காலை 6.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படும். பழைய குற்றால பகுதியில் வாகன நிறுத்தத்திற்கான அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனம் நிறுத்தப்பட வேண்டும். ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் குளிப்பதற்கான தடை உடனடியாக விலக்கி கொள்ளப்படுகிறது. இருப்பினும், அணைக்கட்டு பகுதிகளில் குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.
சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவி பகுதிகளில் குளிக்க செல்லும் போது, பிரதான அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் சோப், சாம்பு, எண்ணெய் பயன்படுத்த கூடாது. அருவி பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கேரி பேக் பயன்படுத்திட அனுமதி இல்லை. குடி போதையில் எவரும் அருவி பகுதியில் குளிக்க அனுமதி இல்லை. காவல் துறை மூலம் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளை பொது மக்கள் கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. குற்றாலம் அருவி பகுதியில் குளிக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியில், சென்னை வானிலை மைய அறிவிப்பு மற்றும் கனமழையினை பொருத்து அவ்வப்போது தேவையான மாறுதல்கள் செய்யப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









