தென்காசி மாவட்டத்தில் 3-வது பொதிகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு அதற்கான இலச்சினை மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் 15.11.2024 முதல் 24.11.2024 வரை தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள 3-வது பொதிகை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு பொதிகை புத்தகத் திருவிழாவின் இலச்சினையை 07.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தக கண்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக் கண்காட்சிகள் தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்படி புத்தக கண்காட்சியினை நவம்பர் 15 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணி அளவில் அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்ற உள்ளனர்.
மேற்படி, இவ்விழாவில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர், தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஆலங்குளம், கடையநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். புத்தக கண்காட்சியில் அறுபதுக்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. நாள்தோறும் பள்ளி, கல்லுரி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மாணவர்களிடையே வாசிப்பினை அறிமுகப்படுத்தும் விதமாக பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற அனைவருக்கும் புத்தகப் பரிசு கூப்பன்கள் வழங்கப்பட உள்ளது. புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி விருதுகள் பெற்ற படைப்பாளிகள், யுவ புரஸ்கார் மற்றும் கலைமாமணி விருதுகள் பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள், தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த கலைஞர்கள் இலக்கிய உரைகள் நிகழ்த்த உள்ளனர்.
மேலும் வாசிப்பின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக முன்னணி பட்டிமன்ற பேச்சாளர்கள் நாள்தோறும் மாலையில் தனி உரைகள் நிகழ்த்த உள்ளனர். புத்தகத் திருவிழாவினை சிறப்பிக்கும் விதமாக தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு கலைஞர்களால் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்து பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட நூலகர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமிர்தலிங்கம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.