தென்காசி தலைமை மருத்துவ மனையில் இந்திய தேசத்தின் 76-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார். அவர் பேசும் போது, தென்காசி மருத்துவ மனை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் சிறப்பான உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு காரணமான, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



தென்காசி மருத்துவ மனையின் அனைத்து பெருமைகளுக்கும் முக்கிய காரணம் நமது மருத்துவமனை களப்பணியாளர்கள் தான். அவர்கள் தங்களது பணிகளை தொழிலாக, சுமையாக கருதாமல் சேவையாக எண்ணி பணி புரிந்ததால் தான், நமது மருத்துவ மனை இத்தகைய பெருமையை பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக இந்த குடியரசு தின விழாவில், சிறப்பாக பணி புரிந்தவர்கள் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தென்காசி மருத்துவ மனையின் வளர்ச்சிக்கு துணைபுரிந்த, களப்பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் திறமையாகவும், சேவை மனப் பான்மையுடன் பணியாற்றி, பொது மக்களின் நலனுக்காகவும், மருத்துவ மனையின் வளர்ச்சிக்காகவும் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பின்னர் தென்காசி தலைமை மருத்துவ மனையில் சிறப்பாக மருத்துவ சேவைகள் புரிந்த செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நுட்புணர்கள், செவிலிய உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மின்சாரத் துறை ஊழியர்கள், அவசர ஊர்தி ஊழியர்கள் என மருத்துவ மனையில் வளர்ச்சிக்கு நேரடியாகவும், வெளியில் இருந்தும் துணை புரிந்த சுமார் 40 பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர்.ஜெஸ்லின் கௌரவித்தார். செவிலியர் மாரீஸ்வரி, குடியரசு தினத்தின் சிறப்புகள் குறித்து பேசினார். மூத்த மருத்துவர் சுரேஷ் மில்லர், சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கும், வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களோடு நன்றிகளையும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் செல்வ பாலா, மருத்துவர்கள் சுரேஷ் மில்லர், விஜயகுமார், மகேஷ், கோபிகா, செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, திருப்பதி, முத்து லட்சுமி, மருந்தாளுனர்கள் கோமதி, லதா, செவிலியர்கள் செந்தாமரை செல்வம், சுதா, மேகலா, கார்த்திகா அனைத்து மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.