தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் அரசு பஸ் டெப்போ அமைத்திட வேண்டும் என நீண்ட காலமாக பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தென்காசி தொகுதியின் 10 முக்கிய கோரிக்கைகளில் “சுரண்டையில் பஸ் டெப்போ” என்ற கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுரண்டை பகுதியில் பஸ் டெப்போ அமைத்திட ஏதுவாக சுரண்டை அரசு கல்லூரி சாலையில் போதிய அரசு புறம்போக்கு நிலம் உள்ளது எனவும், தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடார் உறுதி அளித்துள்ளார்.
மேலும், தமிழக முதலமைச்சர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் “சுரண்டையில் பஸ் டெப்போ” அமைப்பது குறித்து வலியுறுத்தப் பட்டு வரும் நிலையில், தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் இது குறித்து சட்ட மன்றத்தில் குரல் எழுப்பினார். சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகளும் பலமுறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். எனவே போக்கு வரத்து கழகத்தின் நிர்வாக வசதி, வருவாய், டீசல் சிக்கனம், பயணிகளின் நலன், சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டிலேயே சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைப்பதுடன் உடனடியாக தற்காலிகமாக பஸ் டெப்போ அமைக்க வேண்டும் என பொது மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எனவே வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடர் விரைவில் துவங்க விருப்பதால் தென்காசி எம்.எல்.ஏ. எஸ்.பழனி நாடார், திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன், தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளர் கலை கதிரவன் ஆகியோர் இதற்கான முழு முயற்சி எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், தென்காசி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தர உள்ள நிலையில் “சுரண்டையில் பஸ் டெப்போ” அமைப்பது பற்றிய பொது மக்களின் கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.