தேசிய அளவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதியுடன் பல்வேறு சிறப்பான சிகிச்சை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் மருத்துவ மனைகளுக்கு வழங்கப்படும் NQAS எனும் தேசியதர சான்றினை பெற்றது. 2023 ஆம் ஆண்டு KAYAKALP எனப்படும் மருத்துவமனை மற்றும் சுற்றுப்புறம் தூய்மை பராமரிப்பினை ஆய்வு செய்து தேசிய அளவில் சான்று மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், தென்காசி மருத்துவமனை மாநில அளவில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதல் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளது. முதல் பரிசாக ஊக்கத் தொகை 25 லட்சம் ரூபாய் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு தமிழ்நாடு அரசின் மூலம் பரிசாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் வசதிகளை ஆய்வு செய்து, தேசிய அளவில் வழங்கப்படும் LAQSHYA, MUSQAN சான்றினை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தேவைப்படும் அனைத்து விதமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் வசதிகளையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஜெஸ்லின் தலைமையில் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.
இந்நிலையில், தேசிய தரச்சான்று குறித்த ஆய்வு 2024 நவம்பர் 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. ஆய்விற்கு மத்திய ஆய்வுக் குழுவினர் ஹரியானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இருந்து வந்திருந்தனர். அதன் முடிவுகள் நேற்று (06.01.2025) அறிவிக்கப்பட்டது, அதில் தென்காசி மருத்துவ மனை தேசிய அளவில் முதல் மதிப் பெண் பெற்று சாதனை புரிந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் சிறந்த மருத்துவ மனையாக தேர்வு செய்யப்பட்ட, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரையும் வெகுவாக பாராட்டினர். மாவட்ட ஆட்சித் தலைவர். ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா தென்காசி அரசு மருத்துவ மனையை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக செயல்பட்ட அனைத்துத் துறை சார்ந்த பணியாளர்களையும் மருத்துவ மனை கண்காணிப்பாளர் இரா. ஜெஸ்லின் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். சிறப்பாக செயல்பட்டு வரும் தென்காசி அரசு மருத்துவமனை நிர்வாகத்தையும், இணை இயக்குனர் மரு.பிரேமலதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் செல்வ பாலா, மகப்பேறு பிரிவு மருத்துவர் மரு.புனிதவதி, குழந்தைகள் நல பிரிவு மருத்துவர் மரு.கீதா ஆகியோர்களையும், குற்றாலம் இந்திய மருத்துவ சங்கம் சார்பாக தலைவர் மரு.சுப்பிரமணியன், செயலாளர் மரு. ஸ்ரீ மணிகண்டன் மற்றும் முன்னாள் தலைவர்கள் மரு.பார்வதி சங்கர், மரு. அப்துல் அஜீஸ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.