தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்..

தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 11.03.2025 அன்று பரவலான கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் எச்சரிக்கை (ORANGE ALERT) இந்திய வானிலை மையத்தினால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாளில் நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொது மக்கள், கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

கனமழை காலங்களில், பொது மக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும் போது, திறந்த வெளியில் நிற்பதையும், நீர் நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 

மழை மற்றும் வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது. வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

 

பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1077, 04633 – 290548 செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் 1077, 04633 290548 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

 

பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம், சம்பந்தப்பட்ட துறைக்கு நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!