கோடைகால வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தகர சீட்டு கொட்டகையில் இயங்கி வரும் அரசுப் பள்ளிக்கு விடிவு காலம் எப்போது? என்ற கேள்வி சமூக நல ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 650 மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் போதிய இட வசதி இல்லாததால் சீட்டு கொட்டகைகளிலும், மரத்தின் நிழலிலும் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
சீட்டு கொட்டகைகளில் வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால், மாணவ மாணவிகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வரும் நிலையில், இப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும், ஆபிதா ஜீனத், அல்பினா ஆகிய மாணவிகள் உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதே நேரத்தில், அதே பள்ளியில் படித்த அனுசியா என்ற மாணவியும், மயங்கி விழுந்தார். ஒரே பள்ளியில் மூன்று மாணவிகள் மருத்துவமனை சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், இஸ்லாமிய மாணவிகள் நோன்பு வைத்திருந்ததாலும், அனுசியா என்ற மாணவி காலை உணவு சாப்பிடாமல் வந்ததாலும் இது போன்ற மயக்க சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்தனர். எனினும் மாவட்ட நிர்வாகம் பள்ளிக் கூடத்தில் உள்ள தகர கொட்டகைகளை அகற்றி விட்டு, கூடுதல் கட்டிடம் கட்டித் தந்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என பள்ளி மேலாண்மை குழு தலைவி பரிதா, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பள்ளியின் கூடுதல் இடவசதி மற்றும் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டுவது பற்றிய கோரிக்கை மனு கடந்த 06.01.2025 அன்று சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.