தென்காசி மாவட்டத்தில் ஆதரவற்ற நிலையில் சாலையோரம் வசித்து வந்த பெண்ணை மீட்டு மறுவாழ்வு அளித்த தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதிய பெண்மணி சாலையோரம் ஆதரவின்றி தங்கி இருப்பதாக அந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள் மூலம் குற்றாலம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. குற்றாலம் காவல் துறையினர் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட அந்தப் பாட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, குற்றாலம் காவல் துறையினர், தென்காசி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் பசியில்லா தமிழகத்தின் அன்னை பாத்திமா அலி அன்பு இல்லத்தை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பசியில்லா தமிழகம் குழுவினர் பாதிக்கப்பட்ட நபரை மீட்டெடுத்து முதலுதவி செய்து, குற்றாலம் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறை அதிகாரிகள் மூலம் உரிய அனுமதிகள் GENERAL MEMO பெற்று அவர்களது காப்பகத்தில் அனுமதித்தனர். விசாரணையில் பாதிக்கப்பட்ட நபர் பெயர் பார்வதி, வயது 75, கணவர் பெயர் ஆதி மூலம் என்று தெரிய வந்தது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர். கணவரை இழந்த நிலையில் தனியாக சாலையில் வசித்து வருவதாக கூறியுள்ளார். இவரைப் பற்றிய தகவல்கள் யாருக்கேனும் தெரிந்தால் உடனடியாக குற்றாலம் காவல் நிலையம் அல்லது பசியில்லா தமிழகம் அமைப்பை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. ஆதரவற்று ஒரு பெண்மணி சாலையில் இருப்பதை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவிய குற்றாலம் காவல் துறையினருக்கும், பசியில்லா தமிழகம் குழுவினருக்கும் அந்தப் பகுதி மக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். ஆதரவற்ற முதியவரை மீட்டு மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.