தென்காசி மாவட்டத்தில் தனிப்பட்டா வழங்கிட லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பெரியூர் கிராமத்தில், தங்கராஜ் என்பவரிடம் கூட்டுப் பட்டாவை மாற்றி தனிப்பட்டா வழங்க ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் என்பவரை தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால் சுதர் மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, நாலாட்டின்புதூர் கிராமம், மேட்டு தெருவைச் சேர்ந்த M.தங்கராஜா வயது-38, த/பெ முருகன் என்பவர், அவரது மாமனாரின் பெயரில் உள்ள பெரியூர் கிராம சர்வே எண்.319/2c-ல் உள்ள ஒரு ஏக்கர் புஞ்சை நிலம் பட்டா எண்.5517-ன் படி கூட்டுப் பட்டாவில் மாமனார் சண்முகவேல் மற்றும் 4 பேர் பெயர்களில் கூட்டாக உள்ளது. ஆனால் மேற்படி சொத்தானது அவரது மாமனாருக்கு மட்டும் பாத்தியப்பட்டது ஆகும். அதனால் மேற்படி கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப்பட்டா வாங்க அவரது மாமனாரும், அவருடைய மனைவியும் பலமுறை தாலுகா அலுவலத்திலும், RDO அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததாகவும், அவரது மாமனாரால் தொடர்ந்து அலைய முடியாததால் மனு தாரரை தனிப்பட்டா வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய சொல்லி இருந்ததால், மனுதாரர் பெரியூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் அவர்களை பலமுறை சென்று சந்தித்து விபரம் கேட்டதாகவும், கடந்த 29.09.2025 ஆம் தேதி VAO-வை பார்த்த போது ஆவணங்கள் சரியாக உள்ளது என்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யுங்கள் என்று சொல்லி விட்டு தனிப்பட்டா வழங்க பரிந்துரை செய்வதற்கு ரூ.20,000/-ம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
மனுதாரர் அவ்வளவு பணம் எனது மாமனாரால் கொடுக்க முடியாது கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு கேட்கவே, அதற்கு விஏஓ 10 நாட்களுக்குள் ரூ.15,000 பணத்தை கொடுக்கும்படி கேட்டு உள்ளார். லஞ்சமாக ரூ.15,000 கொடுக்க விருப்பம் இல்லாத புகார் தாரர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் பெரியூர் VAO ராஜ்குமார் என்பவர் மீது 09.10.2025-ஆம் தேதி வழக்கு பதிவு செய்து ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூபாய் 10,000 பணத்தை புகார் தாரரிடம் கொடுக்க அந்த பணத்தை லஞ்சமாக பெரியூர் VAO ராஜ்குமார் பெற்றுக் கொண்ட போது அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பால்சுதர், ஆய்வாளர் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளர் ரவி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தெய்வக்கன் ராஜா, வேணு கோபால், பிரபு, கோவிந்த ராஜன், தலைமைக் காவலர் கணேசன் மற்றும் பிரவீனா, மணிமேகலை ஆகிய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் இதுபோல் பொதுமக்களிடம் அரசாங்க ஊழியர்கள் லஞ்சமாக பணம் கேட்டால் தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகார் கொடுப்பவரின் விபரம் இரகசியமாக வைக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.