தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட கலெக்டர் வழங்கினார்
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 810 மனுக்கள் பெறப்பட்டதுடன், ரூ. 3 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.



தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் நலவாரியத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத் திறனாளிகளின் 17 வாரிசுதாரர்களுக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை தலா ரூ.17,000 வீதம் ரூ.2,89,000-க்கான காசோலைகளையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு கருச்சிதைவு உதவித்தொகை ரூ.9000-க்கான காசோலையையும், ஒரு மாற்றுத்திறனாளி வாரிசுதாரருக்கு திருமண நிதி உதவித்தொகை ரூ.2000-க்கான காசோலை என மொத்தம் ரூ.3,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா. முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 810 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) அமிர்தலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.முருகானந்தம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெய பிரகாஷ், உதவி ஆணையர் (கலால்) இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக் அயுப், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) இரா.இராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.