தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் ஒன்றிய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் சேவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இன்டர்நெட் மற்றும் தொலைபேசி சேவையை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது வங்கி கணக்குகள் மற்றும் வர்த்தக கணக்குகள், ஏடிஎம், ஜி.பே, போன்பே போன்ற மூன்றாம் தர செயலிகளின் பணப் பரிமாற்றத்திற்கு இன்டர்நெட் மற்றும் மொபைல் சேவை இன்றியமையாததாக உள்ளது. அனைவரிடமும் 5ஜி ஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ள நிலையில், தற்போது தான் பிஎஸ்என்எல் சில பகுதிகளில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வந்து வர்த்தகம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் சுரண்டை உள்ளிட்ட பல பகுதிகளில் ஒன்றிய அரசின் பிஎஸ்என்எல் சேவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. கிராஸ் இணைப்பு, ரிங் மட்டும் போகிறது பேச முடிவதில்லை. இன்டர்நெட் சேவை சரிவர கிடைக்காததால் வங்கி பணிகள், அலுவலக பணிகள், பணப்பரிமாற்றங்கள் செய்ய முடியாமல் முடங்கி போய் உள்ளது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தொலைபேசி மற்றும் இன்டர்நெட் சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் லட்சக்கணக்கானோர் ஒன்றிய அரசின் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறினர். ஆனால் தற்போது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தனியார் சேவைக்கு மாறினால் சலுகைகள் வழங்குவதாக தனியார் செல்போன் நிறுவனங்கள் அறிவித்து மாற்றியும் வருகின்றனர். இந்நிலையில், பிஎஸ்என்எல் சேவையை சரி செய்யாமல் இருப்பது மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பிஎஸ்என்எல் நிர்வாகம் தென்காசி மாவட்டத்தின் சுரண்டை உள்ளிட்ட பல பகுதிகளிலும் பிஎஸ்என்எல் சேவை சிரமம் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.