தென்காசியில் ஜாக்டோ ஜியோ சார்பில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற கோரி மாநில உயர் மட்டக்குழு முடிவின் அடிப் படையில் மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகர் உண்ணாவிரத போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ தென்காசி மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் பால சுப்பிரமணியன், இரா.சண்முக சுந்தரம், பிச்சைக்கனி, ஆரோக்கிய ராசு, ராஜேந்திரன், முருகேஷ் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் கலைச்செல்வி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவரும், மாநில ஒருங்கிணைப் பாளருமான பாக்கியராஜ் துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளரும், ஜாக்டோ ஜியோ மாநில உயர் மட்டக்குழு உறுப்பினருமான வெங்கடேஷ் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக் குழு உறுப்பிணருமான துரைசிங் நிறைவுரை ஆற்றினார்.
இந்த போராட்டத்தின் வாயிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனே அமல்படுத்த வேண்டும். TET தேர்வில் இருந்து விலக்களித்து ஆசிரியர்களை பாதுகாத்திட வேண்டும், ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான வழங்கப்பட வேண்டும் மற்றும் அரசு துறையின் 30% மேலாக உள்ள பணியிடங்களை நிரப்பிட காலியாக நடவடிக்கை வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் காதுகளில் பூவை சுற்றி, திருவோடு ஏந்தி தங்களது கண்டன கோஷங்களை எழுப்பினர். உண்ணாவிரத போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பில் அங்கம் பெற்றுள்ள அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட நிதி காப்பாளர் சதிஷ் குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.