தென்காசியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

தென்காசியில் ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய, மாவட்ட அளவிலான கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும், தென்காசி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தலைவருமான ஆர். தங்கத்துரை தலைமை தாங்கினார். மாநில மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வே. புதியவன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.ராமநாதன் பின்வரும் 16 அம்ச கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

தூய்மைப் பணியாளர்களின் மாதாந்திர ஊதியம் ரூபாய் 10,000 வழங்கிட வேண்டும். 01.06.2009 முதல் அரசாணை எண் 234 ன் படி மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை தற்போது காலம் வரை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை இயக்குபவர்களின் பணிக் காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியமாக ரூபாய் 15,000 வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் 18 ஆண்டுகளாக பணி புரியும் கணினி உதவியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் வட்டார, மற்றும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் பணி காலத்தை கருத்தில் கொண்டு வட்டார, மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

 

கிராம சுகாதார ஊக்குனர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஊதியம் வழங்கிட வேண்டும்‌. தூய்மை காவலர்களுக்கு குடும்ப நல நிதி பிடித்தம் செய்து அவர்கள் இறப்பினை எய்தும் போது ரூபாய் 5 லட்சம் வழங்கிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, தேக்கநிலை ஊதியம் வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை அமல்படுத்தி என்.எச்.ஐ.எஸ், ஜிஐஎஸ், பி.எப், ஆகியவை பிடித்தம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகள் பணிபுரிந்த வட்டார சுகாதார ஒருங்கிணைப் பாளர்களுக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலும், மாவட்ட சுகாதார ஒருங்கிணைப் பாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலும் ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும்.

 

கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ஊதியம் வழங்கி பணி பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூபாய் 5 ஆயிரம் மற்றும் பணிக் கொடையாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் தூய்மை காவலர்கள் தூய்மை பணியாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சுகாதார ஊக்குனர்கள் ஆகியோருக்கு கிராம ஊராட்சி ஊதிய கணக்கில் ஊதியம் வழங்கி அதனை பிரதி மாதம் கடைசி வேலை நாளில் பெரும் வகையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர் கையொப்பமிட வழிவகை செய்திட வேண்டும்.

 

மேற்கண்ட 16 அம்ச கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில், வரும் அக்டோபர் 29ஆம் தேதி தமிழ் நாடு முழுவதும் புதன் கிழமை அனைத்து ஊழியர்களும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திடவும், வரும் நவம்பர் 24ஆம் தேதி திங்கட்கிழமை தொடர் கால வரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ச.கந்தசாமி, மாவட்ட தலைவர் பி.தங்கத்துரை, ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் ஆர். மாரியப்பன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.ராமநாதன், மாநில மக்கள் நல பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வே.புதியவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

 

மேலும், ஊராட்சி செயலாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், கணினி உதவியாளர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள், கிராம சுகாதார ஊக்குனர்கள் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. சக்திவேல் நன்றி கூறினார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!