தென்காசி மாவட்டத்தில் தவறவிட்ட தங்கச் செயினை உரிய நபரிடம் ஒப்படைத்த தலைமைக் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் சுடலை கண்ணு, பணி நிமித்தமாக தென்காசி வந்துவிட்டு மீண்டும் வாசுதேவ நல்லூர் செல்லும் வேளையில், தென்காசியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்ற போது அங்கு கீழே தங்க செயின் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்த தலைமைக் காவலர், செயின் உரிமையாளர் இங்கே வந்தால் எனது எண்ணில் தொடர்பு கொள்ள கூறுங்கள் என்று கடையின் உரிமையாளரிடம் கூறிவிட்டு வந்துள்ளார்.

பின்னர், சிறிது நேரம் கழித்து செயினை தவற விட்டவர்கள் வந்தவுடன், அவர்களை மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் அறிவுறுத்தலின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் முன்னிலையில், அதன் உரிமையாளரிடம் தங்க செயின் ஒப்படைக்கப்பட்டது. செயினை பெற்றுக் கொண்ட அதன் உரிமையாளர் காவலருக்கு தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். பின்னர் நேர்மையான முறையில் கீழே கிடந்த தங்க செயினை உரிய நபரிடம் ஒப்படைத்த தலைமைக் காவலரை பாராட்டும் விதமாக அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நேர்மை மிக்க தலைமைக் காவலரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்