பொது மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள், நலவாரிய அடையாள அட்டை, பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 07.07.2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 08 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,10,000 வீதம் மொத்தம் 8,80,000 இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் துறையின் மூலம் 04 பயனாளிகளுக்கு ரூ.4000 வீதம் ரூ.16,000 மதிப்பிலான இலவச தேய்ப்பு பெட்டிகளையும், 11 பயனாளிகளுக்கு சீர் மரபினர் நலவாரிய அடையாள அட்டைகளையும், தாட்கோ மூலம் திருவேங்கடம் வட்டம் அழகாபுரி பகுதியில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய நலக் கூடத்தின் சாவியினை ஆதிரை மகளிர் சுய உதவிக் குழுவினரிடமும், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 03.07.2025 அன்று நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழா கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்கள் 06 நபர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.

 

மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 452 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

 

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்து ராமலிங்கம், இணைப் பதிவாளர் (கூட்டுறவு) நரசிம்மன், மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயப் பிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!