தென்காசி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்”..

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் ஜீலை 15 முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்து உள்ளார். முதலமைச்சர் அறிவிப்பின் படி, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டதின் கீழ் மொத்தம் 282 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டம் ஜீலை 15 முதல் அக்டோபர் மாதம் வரை தென்காசி மாவட்டத்தில் நடைபெறும். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் துறைகளின் சேவைகள் அல்லது திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

 

இத்திட்டத்தின் கீழ் நகர்புறப் பகுதிகளில் 104 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 178 முகாம்களும் நடைபெறும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொது மக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். பொது மக்கள் பயன்பெறும் வகையில் காவல் துறையில் “May I Help You” என்ற தகவல் உதவி மையமும் இந்த முகாம்களில் அமைக்கப்படும்.

 

இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்பட உள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள் மற்றும் சேவைகளை விவரித்து, அவற்றில் பயன் அடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேடு மற்றும் விண்ணப்பத்தை வழங்குவர் மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம் முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

இத்திட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் பொது மக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளுக்கும், நகர்ப்புறம் மற்றும் பேரூராட்சிகளில் வார்டு வாரியாகவும் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழஙகும் பணி, 07.07.2025 முதல் தொடங்க உள்ளது. இந்தப் பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இப்பணிக்காக சுமார் 1500 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊரகம் மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு மொத்தம் 33 பொறுப்பு அலுவலர்களும், வட்டார பகுதிகளுக்கு 10 கண்காணிப்பு அலுவலர்களும், நகரப் பகுதிகளுக்கு 23 கண்காணிப்பு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

இதில் ஆதார் அட்டை, சொத்துவரி, குடிநீர் வசதி, உரிமங்கள் மற்றும் அனுமதி, கழிவு நீர் இணைப்பு, அடிப்படை வசதிகள் பராமரிப்பு, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், காலி நில வரி, தெரு வியாபாரி அடையாள அட்டை, சொத்துவரி பெயர் மாற்றம் மற்றும் கட்டிடம் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வாயிலாக வழங்கப்பட உள்ளது. பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் பட்டா பெயர் திருத்தம், பட்டா சிட்டா நகல், பிறப்பு, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், மாற்றுத் திறனாளி உபகரணங்கள், ஆதி திராவிடர்களுக்கு தாட்கோ மூலம் கடன் டாம்கோ மற்றும் டாப்செட்கோ கடன்கள் உள்ளிட்ட மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்படும்.

 

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!