சொத்து கணக்கு காட்டாவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்: மத்திய நேரடி வரிகள் வாரியம்..
வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் மற்றும் வருவாய் குறித்த தகவல்களை, வருமான வரி கணக்கு தாக்கலில் தெரிவிக்காவிட்டால், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:
வரி மதிப்பீட்டு ஆண்டு 2024 – 25க்கான வருமான வரி கணக்கை தாமதமாக அல்லது திருத்தப்பட்ட கணக்கை தாக்கல் செய்வதற்கு, டிச., 31ம் தேதி கடைசி நாளாகும்.
கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ், வருமான வரி கணக்கு தாக்கலின்போது, வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் மற்றும் அங்கிருந்து கிடைக்கும் வருவாய் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு முறையாக கணக்கு காட்டாவிட்டால், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.
வருமான வரி வரம்புக்கு குறைவாக இருந்தாலும், வெளிநாட்டில் இருந்து கிடைத்த வருவாய் குறித்த தகவல்களை, வருமான வரி கணக்கு தாக்கலில் தெரிவிக்க வேண்டும்.
அதுபோல, முறையாக வாங்கப்பட்ட சொத்தாக இருந்தாலும், அதன் விபரமும் தெரிவிக்க வேண்டும்.
இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, ஏற்கனவே கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., எனப்படும் குறுஞ்செய்தி மற்றும் இ – மெயில் வாயிலாக தகவல் அனுப்பப்படும்.
இதுவரை இந்த விபரங்களை தெரிவிக்காதவர்கள், தங்களுடைய வருமான வரிக் கணக்கை திருத்தி தாக்கல் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.