அரியலூர் தலித் சிறுமி பாலியல் வழக்கில் விடுவிக்கப்பட்ட 3 நபருக்கு எதிராக மேல்முறையீடு செய்க! தமிழ்நாடு அரசுக்கு டாஸ் மாநில செயலாளர் ஜெபசிங் கோரிக்கை..
அரியலூர் சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது தலித் சிறுமியை 2016ம் ஆண்டு குற்றவாளியான இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் மூன்று நபர்களுடன சேர்ந்து பல நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி பின்பு படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மீது ஏற்கனவே பல தேவாலயங்களை சேதபடுத்தியது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பது உட்பட பல வழக்குகளுடன் குற்றப் பின்னணி கொண்ட ஒரு நபர்.
சிறுமியின் தாயார் இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பேரில் நீண்ட தேடுதலுக்கு பிறகு 11 நாட்களுக்குப் பிறகுதான் பாழடைந்த கிணற்றில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 20 நாட்களுக்குப் பிறகு தான் முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்து உள்ளனர்.
கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 2020 முதல் அரியலூர் மகளிர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் முதன்மைக் குற்றவாளியான நபருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) அரியலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு படுகொலை செய்த இதர குற்றவாளிகள் மூவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
காவல் துறையின் அலட்சியப் போக்கே இவ்வழக்கில் எதிர் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான காரணமாக அமைந்துள்ளது. சிறுமியின் குடும்பம் உறுதியாக நின்று கடைசி வரை சட்டப் போராட்டத்தை நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததுடன் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதற்கு முழு பலத்துடன் போராடிய குடும்பத்தை பாராட்ட வேண்டும். இந்நிலையில் விடுவிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகளையும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தி அவர்களை தண்டனைக்கு உள்ளாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்திட தமிழ்நாடு திருச்சபை பணியாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச் சங்கம் (டாஸ்) சார்பாக மாநில செயலாளர் ஜெபசிங் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.
You must be logged in to post a comment.