தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சங்கங்களின் கோரிக்கை மாநில மாநாடு..

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் தறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23.08.2025 சனிக் கிழமை அன்று திருச்சியில் மாநில அளவிலான கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் நல்.செல்லப் பாண்டியன், நெல்லை வே. புதியவன், கோ. ரங்கராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,

 

இந்த கோரிக்கை மாநாட்டிற்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அ. ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமை தாங்குகிறார். தோழமை சங்கத்தின் நிர்வாகிகள் கே. மகேஸ்வரன், சு. இராம லிங்கம், கோ. ரங்கராஜ் சு. மாரியப்பன், ஏ. ஆத்மநாதன், பி. முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில துணை ஒருங்கிணைப் பாளர் வந்தவாசி வி.சுரேஷ் அனைவரையும் வரவேற்று பேசுகிறார். மாநில ஒருங்கிணைப் பாளர் ஏ. சுப்பிரமணி மாநாட்டில் துவக்க உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் தோழமை சங்கத்தின் நிர்வாகிகள் பி. வேல் முருகன், பி. முத்து மாரி, மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வே. புதியவன், கே. கார்த்திகேயன், பி. செல்வ ராணி, கே. சிவகாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப் பாளர்கள் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் நல். செல்லப் பாண்டியன், ம. ரவி, கே. பழனிச்சாமி, ஜி. ராதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேருரை ஆற்றுகிறார்கள்.

 

இந்த மாநாட்டில் வலியுறுத்தும் கோரிக்கைகள் வருமாறு

 

1. தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10000(பத்தாயிரம்) ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும்.

 

2. 01.06.2009 முதல் அரசாணை எண் 234ன் படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தைத் தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

 

3. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தினை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ. 15000 (பதினைந்தாயிரம்) வழங்கிட வேண்டும்.

 

4. ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும்

 

5. MGNREGS திட்டத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்திட அரசாணை எண் : 37 வெளியிட்ட பின்னரும் இதுநாள் வரை பணி நிரந்தரம் செய்யவில்லை. எனவே கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

 

6. ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் வட்டார மற்றும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் பணிக் காலத்தை கருத்தில் கொண்டு வட்டார மற்றும் மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்

 

7. 03 ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களை சிறப்பு காலமுறை ஊதியத்திலும் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்றம் செய்து நகராட்சி நிர்வாகத் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பெறும் ஊதியத்தை அவர்களுக்கு வழங்கிட வேண்டும்.

 

8. கிராம சுகாதார ஊக்குநர்களுக்கு மாதம் ரூ.10000(பத்தாயிரம்) ஊதியம் வழங்கிட வேண்டும் மற்றும் பணிப்பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

 

9. தூய்மை காவலர்களுக்கு குடும்ப நலநிதி பிடித்தம் செய்து அவர்கள் இறப்பினை எய்தும் போது ரூ.5,000,00 (ஐந்து லட்சம்) வழங்கிட வேண்டும்.

 

10. மக்கள் நலப் பணியாளர்களுக்கு கடந்த 19.08.2014 ஆம் தேதியன்று மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பினை நடைமுறைப் படுத்த வேண்டும்.

 

11. ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை / தேக்க நிலை ஊதியம் வழங்கிட வேண்டும்.

 

12. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட கணினி உதவியாளர் களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை அமல்படுத்தி NHIS, GIS, PF ஆகியவை பிடித்தம் செய்ய வேண்டும்.

 

13. 10 ஆண்டுகள் பணிமுடிந்த வட்டார சுகாதார ஒருங்கிணைப் பாளர்களுக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலும், மாவட்ட சுகாதார ஒருங்கிணைப் பாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலும் ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும்.

 

14. மாதம் ரூ.250 (இருநூற்று ஐம்பது) ஊதியத்தில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களை கணக்கெடுப்பு செய்து பணிவரன் முறை செய்திட வேண்டும்.

 

15. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000 பணிக்கொடை ரூ. 1,00,000 (ஒரு லட்சம்) வழங்கிட வேண்டும்.

 

16. கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள். சுகாதார ஊக்குநர்கள் ஆகியோருக்கு கிராம ஊராட்சி ஊதிய கணக்கில் ஊதியம் வழங்கி அதனை பிரதி மாதம் கடைசி வேலை நாளில் பெறும் வகையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி செயலர் கையொப்பமிட வழிவகை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளது.

 

இந்த கோரிக்கை மாநாடு மாநில துணை ஒருங்கிணைப் பாளர் செங்கதிர் செல்வன் நன்றி கூற நிறைவு பெறும் என்றும், இந்த மாநாட்டில் அனைத்து சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் எனவும் ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!