ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகில், தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் 3.3.2025 அன்று நடைபெற்ற நாகப்பட்டினம் மாவட்ட அரசு விழாவில் அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் விமானம் புறப்படுவதற்கு ஒருநாள் முன்னர் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அலுவலகத்தை அணுகி பயண நடைமுறைகளை நிறைவேற்றி விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு ஏதுவாக சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 39 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டுமானப் பணிக்கு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார். இப்புதிய தமிழ்நாடு ஹஜ் இல்லம் அடித்தளம் உட்பட நான்கு தளங்களுடன் கட்டப்படவுள்ளது. இக்கட்டடத்தின் அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், தரைத் தளத்தில் ஹஜ் அலுவலகம், வரவேற்பறை, கூட்ட அறை, ஹஜ் பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கும் அறை, முதல் தளத்திலிருந்து நான்காவது தளம் வரை சுமார் 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில் மொத்தம் 100 படுக்கை அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்படவுள்ளன. இவ்விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் இ. கருணாநிதி, எஸ்.ஆர். ராஜா, ஜெ. முகம்மது ஷா நவாஸ், அப்துல் வகாப், கே.எஸ். மஸ்தான், வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளர் மற்றும் செயல் அலுவலர் / முதன்மைச் செயலாளர் மு.அ. சித்திக், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசுச் செயலாளர் எ.சரவணவேல்ராஜ், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சினேகா, இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் ஜோ. அருண், துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், சென்னை மாவட்ட காஜி உஸ்மான் மொகிதீன் உள்ளிட்ட மாவட்ட காஜிக்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர்கள், கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளர் சுபேர்கான், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.