உயர்கல்வி மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்..

6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 09.08.2024 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மாணவர்களுக்கு பற்று அட்டைகளை (Debit Card) வழங்கினார்.

 

கல்வியறிவும் பொருளாதார சுதந்திரமும் பெண்களின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசு, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்க்கல்வி சேர்க்கை மிகக்குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி படிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கும் “புதுமைப் பெண் திட்டத்தை 05.09.2022 முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டமானது 2024-2025-ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் உட்பட சுமார் 3.28 இலட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தினால் மாணவிகள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது.

2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்ப் புதல்வன் திட்டம்” அறிவிப்பு: தமிழ்நாட்டில் பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்வதற்கென தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டமானது மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதையடுத்து, 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம்” பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் ‘தமிழ்ப் புதல்வன்’ எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள், பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் மூன்று இலட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர் என்று அறிவிக்கப்பட்டது.

உயர்கல்வி, மாணவர்களின் கனவுகளை நனவாக்க உதவும் என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசு, புதுமைப் பெண்களுக்கு மட்டும் அல்லாமல் தமிழ்ப் புதல்வர்களாகிய மாணவர்களுக்கும் தாயுமானவனாக என்றும் உடனிருப்பேன் என்னும் விதமாக அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற அனைத்து மாணவர்களும் கலை மற்றும் அறிவியல், பண்பாடு, தொழில்நுட்பம், விவசாயம், செவிலியர், மருத்துவம் சார்ந்த படிப்புகள், சட்டம், பொறியியல், தொழிற்கல்வி சார்ந்த பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளில் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு பல்கலைக் கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் (ரூ.1,000) ஊக்கத் தொகையை அவர்கள் முழுமையாக அப்படிப்பினை படிக்கும் பாட நெறி காலத்திற்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் உயர் கல்வி இலக்கினை அடையவும். எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற்றிடவும் இயலும்.

“தமிழ்ப் புதல்வன் திட்டம்” செயல்படுத்தப்படும் முறை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து பயன்பெறும் வகையிலும், மாணவர்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையிலும், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தினை செயல்படுத்திட மாணவியர்களுக்காக ஏற்கனவே தமிழ்நாடு அரசால் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் “புதுமைப் பெண்” திட்டத்தின் அடிப்படையில் இன்று துவக்கி வைக்கப்படும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தில் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும். தற்போது வரை புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 3,28,280 மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை பெற்று பயன்பெற்று வருகின்றனர்.

தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று இந்திய அரசு, தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சுமார் 3.28 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசால் 2024-2025-ஆம் நிதியாண்டிற்கு 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து மாணவர்கள் பயன்பெற்றிட இணையதள வாயிலாக விண்ணப்பிக்க பிரத்தியேகமான தகவல் முகமை (Portal https://umis.tn.gov.in) வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவருக்கு தனிப்பட்ட எண் (Unique ID) உருவாக்கப்பட்டு, மாணவரால் பதிவு செய்யப்பட்ட அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அந்த எண்ணைக் கொண்டு விண்ணப்பங்களின் நிலையினை அறிந்து கொள்ள இயலும்.

மாணவர்களின் ஆதார் எண், பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (EMIS) தரவுகள் மற்றும் உயர்கல்வி பயிலும் நிறுவனத்தில் பெற்ற சேர்க்கை மற்றும் பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு (UMIS) ஆகிய தரவுகளுடன் மாணவர்களின் விண்ணப்பம் ஒற்றைச் சாளர முறையில் சரிபார்க்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் சமூக நலத்துறையால் National Automated Clearing House வாயிலாக ரூ.1.000 உதவித் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்யும் போதும், ஊக்கத் தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்த பின்னரும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இத்திட்டத்தில் கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும்) போன்ற உயர்கல்வி படிப்புகள் படிக்கும் மாணவர்கள் பயன்பெறலாம். மேலும், எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முடித்து, தொழிற்பயிற்சி பயில்வோரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

அதேபோன்று பிற மாநிலங்களில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் IIT. NIT. IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மகத்தான திட்டமான “தமிழ்ப் புதல்வன் திட்டம்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் இன்றைய தினம் (09.08.2023) கோயம்புத்தூர், அரசு கலை கல்லூரியில் தொடங்கி வைக்கப்பட்டது. அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் இந்நிகழ்ச்சி தொடரப்பட்டது.

இவ்விழாவில், உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ஆர். ரங்கநாயகி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், கே. ஈஸ்வரசாமி, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!