“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” மொபைல் செயலி துவக்கம்..

தமிழ்நாடு அரசால் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற புதிய அலைபேசி செயலி (Mobile App) தொடங்கப்பட்டு உள்ளது. இச்செயலியை தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் துவங்கி வைத்து அதன் இலட்சினையை (Logo) அறிமுகப்படுத்தினார். இது பற்றிய தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழ்நாடு அரசு போதைப் பொருட்கள் புழக்கத்தினை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 10 ஆகஸ்ட் 2022 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 16.05.2024 அன்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைய மூன்று வல்லுநர்கள் கொண்ட போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டிற்கான இயக்க மேலாண்மை அலகு என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் 15,266 போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டு, 1,99,136 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். போதைப் பொருள் எதிர்ப்பு மன்றம் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் பொருட்டு, சிறப்பாக செயல்படும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றத்தினை தேர்வு செய்து பரிசுகள் வழங்கிட மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்களை தேர்வு செய்யும்.

 

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போதைப் பொருள் நடமாட்டம் குறித்த புகார்கள் அளிக்க ஏதுவாக புதிதாக “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற அலைபேசி செயலி இன்று (11.01.2025) தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் புகார் அளிப்பவர்களின் பெயர்கள் மற்றும் தரவுகள் ரகசியம் காக்கப்படும். மேலும் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு இயக்கத்திற்கான இலட்சினை (Logo)-யும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தீரஜ் குமார், உயர்கல்வித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (அமலாக்கப் பணியகம் குற்றப் புலனாய்வுத் துறை) டாக்டர் ஆ. அமல் ராஜ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் எஸ்.பி. கார்த்திகா, போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு இயக்க மேலாண்மை அலகு இயக்குநர் ஆனி மேரி சுவர்ணா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!