தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மினி டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க், ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் மாஸ்டர் பிளான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றார் என தமிழ்நாடு துணை முதலமைச்சர உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 14.11.2024 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களான முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பட்டா மாற்றம், சான்றிதழ்கள், நிவாரண உதவித்தொகை உள்ளிட்டவை கோரி மக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வளர்ச்சித் திட்ட பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள், குடிநீர் திட்டப்பணிகள். சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் நிலுவைக்கான காரணம் குறித்து தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் அதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தூத்துக்குடி மாவட்ட மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுடைய வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. மினி டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க், பக்தர்களுடைய வசதிக்காகவும் கோயிலை சுற்றியுள்ள மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருச்செந்தூர் மாஸ்டர் பிளான் என பல்வேறு முன்னெடுப்புகளை முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகின்றார். அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் சேவைகள் மக்களுக்கு விரைவாகவும், தரமாகவும் கிடைக்க செய்ய வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கின்றேன்.
இன்றைய தினம் 7,893 பயனாளிகள் பயனடைகின்ற வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் 206.47 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய பணியாற்றிய மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரின் முகவரி. மக்களிடம் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண அலுவலர்கள் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்திய ஒன்றியத்திலேயே மருத்துவ கட்டமைப்புகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குகின்றது. மருத்துவ சேவைகள் முழுமையாக மக்களுக்கு கிடைக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று துணை முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி. சண்முகையா, ஜி.வி.மார்க்கண்டேயன், ஊர்வசி, செ.அமிர்தராஜ், மேயர் பெ.ஜெகன், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் மருத்துவர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அ.பிரம்மசக்தி, துணை மேயர் செ.ஜெனிட்டா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை துணைச் செயலாளர் மு.பிரதாப், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.