தமிழ்நாட்டிற்கான இடைக்கால நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெஞ்சல் புயலால் செங்கற்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் கடும் மழையினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததால் ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. பேரிடர் மீட்பு படையினர் 10 மணி நேரம் போராடியும் இவர்களை மீட்க முடியாத நிலையில் உயிரிழப்பு நடந்திருக்கிறது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எதிர்காலத்தில் திருவண்ணாமலை அடிவாரத்தில் இத்தகைய மண் சரிவினால் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
பெஞ்சல் புயல் நகர்வுகளை துல்லியமாக கணிக்கத் தவறியதாக ஒன்றிய வானிலை ஆராய்ச்சி மையம் மீது பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. புயல் குறித்த முன்னெடுப்பு பணிகளை ஒன்றிய அரசு கடைசி வரை மேற்கொள்ளவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. புயல் அறிவிப்பு வெளியான உடனேயே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்ததால் உயிர்ப்பலி போன்ற பெரிய அசம்பாவித நிகழ்வுகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, பெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட செங்கற்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். சேத விவரங்களையும் கேட்டறிந்துள்ளார். புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதாரத்தின் அளவை உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வழங்குகிற அறிக்கையின் அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகள் பெரும் முதலீடு செய்து சாகுபடி செய்த நெற்பயிர்கள் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். அவர்களது துன்பங்களை துடைக்க முதலமைச்சர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் இப்பெரும் புயல் மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இடைக்கால நிவாரண நிதியாக ரூபாய் 2000 கோடியை ஒதுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த காலங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஒன்றிய அரசிடம் நிதி கேட்ட போது தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள். அதேபோல, இம்முறையும் பிரதமர் மோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட தொகையை ஒதுக்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளக் கூடாது. இத்தகைய இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க நிவாரண நிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அணுகுமுறையை பிரதமர் மோடி கையாள வேண்டும். எனவே, தமிழக முதலமைச்சர் கேட்ட இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









