சிவகாசி தாலுகா காக்கி வாடன் பட்டி கிராமத்தில் கெமிக்கல் ஆலையின் நச்சுக் கழிவுகளால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த நச்சு ஆலையை விரைவில் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் OA. நாராயணசாமி தெரிவித்துள்ளதாவது,
சிவகாசி தாலுகா காக்கி வாடன் பட்டி கிராமத்தில் கெமிக்கல் ஆலை உள்ளது. இந்த கெமிக்கல் ஆலையின் கழிவுகள் அனைத்தும் ஓடையிலும், உபயோகமற்ற கிணற்றிலும் விடப்பட்டு அது விவசாய பம்பு செட் கிணறுகளில் அதன் கசிவு ஏற்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர்கள் அனைத்தும் கருகி விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள குளங்களில் கசிவு ஏற்பட்டு அந்த குளங்களில் குளிக்கும் மக்களுக்கு அரிப்பு தன்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
இப்பகுதி விவசாய நிலங்களில் பயிர்களின் வளர்ச்சி தன்மை குன்றி போய் உள்ளது. மேலும் இன்னும் சில வருடங்களில் காக்கி வாடன் பட்டி கிராமம் முழுவதும் விஷத்தன்மை பரவும் அபாய சூழ்நிலை உள்ளது. ஆகையால் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகியவை இங்கு வந்து இப்பகுதியை நேரில் பார்வையிட்டு உடனடியாக நச்சு கெமிக்கல் உள்ள இந்த ஆலையை மூட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இது விஷயத்தில் உடனடியாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் OA. நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
You must be logged in to post a comment.