ஊரடங்கு- உணவின்றி தவிக்கும் 11,700 பகுதி நேர ஆசிரியர்களுக்கு கருணை அடிப்படையில் மே மாத சம்பளம் வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்..
‘அரசாணை 177 நியமனத்தின் கீழ் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் ரூபாய் 5000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்கள்.பல்வேறு காரணங்களினால் சிலர் பணியிலிருந்து விலகிய பிறகு தற்போது 11,700 பேர் மாநிலம் முழுவதும் உடற்கல்வி, ஓவியம், இசை ஆசிரியர்களாக மாதத்திற்கு 12 நாள்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்குத் தற்போதைய சம்பளமாக ரூ.7,700 வழங்கப்பட்டுவருகிறது. ஆனால் அவர்களுக்கு பள்ளி விடுமுறை காலமான மே மாதம் சம்பளம் வழங்கப்படாது. அம்மாதத்தில் வேறு வேலை செய்தே குடும்பம் நடத்திவந்தார்கள். இம்முறை கரோனா தடுப்பு நடவடிக்கையாக 25 மார்ச் மாதம் தொடங்கி மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனால் அவர்கள் நெருக்கடியான சூழலில் சம்பளமின்றித் தவித்து வருகின்றனர். ஏற்கனவே மாதம் 7700 ரூபாய் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்துவருபவர்கள் தற்போது எவ்வித வருமானமுமின்றி குடும்பத்தை காப்பாற்ற தத்தளித்து வருகிறார்கள்.பணம் ஈட்டுவதற்கு எவ்வித வழியுமின்றி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 11,700 குடும்பங்களை காப்பாற்றிட ஊரடங்கு காலமாக உள்ளதால் இம்முறை பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்


You must be logged in to post a comment.