தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் நிலையில் முதல்வரின் கவனத்தை சுரண்டை நகராட்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களின் மத்தியில் எழுந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக நகரங்களுள் சுரண்டை நகராட்சி ஒன்றாகும். மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள சுரண்டை நகராட்சியில் தற்போது சுமார் 75 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயமும், வர்த்தகமும் இப்பகுதி மக்களின் பிரதானமாக உள்ளது. மேலும் சுரண்டையை சுற்றியுள்ள சுமார் 40 ஊராட்சி 4 பேரூராட்சி பகுதியை சேர்ந்த 200க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் சுரண்டை பகுதியை சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், தென்காசி எம்எல்ஏ எஸ்.பழனி நாடார் உள்ளிட்ட அரசியல் முக்கிய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் வசித்து வரும் பெருமையை பெற்ற நகரமாக சுரண்டை விளங்குகிறது. தென்காசி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய நகரமாகவும் சுரண்டை பகுதி உள்ளது. ஆனால் நீண்ட காலமாகவே இப்பகுதி மக்கள் பல்வேறு முக்கிய தேவைகளை அரசிடமிருந்து எதிர்பார்த்து உள்ளனர்.
குறிப்பாக இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதியில் தன்னிறைவு பெற்றிட அரசு பஸ் டெப்போ அமைக்க கோரி சுமார் 35 வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கான அனைத்து சாத்தியக் கூறுகள் இருந்தும் இதுவரை நிறைவேற்றப் படாத நிலை தொடர்கிறது. மிக முக்கியமான நகரமாக இருந்தும் இங்கு ஒரே ஒரு மருத்துவரை மட்டுமே கொண்டு இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே செயல்படுகிறது. அதனை 50 படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வலியுறுத்தியும் கடந்த 29-10-2010 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டும் இதுவரை எந்த பணியும் துவங்கப்பட வில்லை. காமராஜர் ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்ட இரட்டை குளம் ஊத்துமலை கால்வாய் திட்டத்திற்கு இதுவரை பலமுறை ஆய்வு பணிகள் செய்தும் இன்னும் அத்திட்டம் கனவாகவே உள்ளது.
சுரண்டை, வீரகேரளம் புதூர், சாம்பவர் வடகரை, ஊத்துமலை, சேர்ந்தமரம் ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படாத நிலை தொடர்கிறது. திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தென்காசி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை ஆகிய இரண்டையும் இணைக்கும் வகையில் ராஜ பாளையத்தில் இருந்து சங்கரன் கோவில், வீரசிகாமணி, சுரண்டை வழியாக அத்தியூத்து வரை உள்ள சாலைகளை நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்த வேண்டும்.
வீரகேரளம்புதூர் தாலுகா பகுதிக்கென சார்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். சுரண்டை பகுதிக்கென மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். சுரண்டையில் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த சுரண்டை நகராட்சி முதலமைச்சரின் கவனத்தை பெற வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். தென் தமிழகத்தின் பெரிய கல்லூரியாக சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியை ஏற்படுத்தி, சுரண்டையை நகராட்சியாக தரம் உயர்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கண்ட அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன் வைத்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

