நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிடுக: தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிகாரில் சிறப்பு திருத்த முறையால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, காரணங்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் அடையாளத்தை ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும், ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்குள் அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.

பிகாரில் சிறப்புத் திருத்த முறைக்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் ஆதார் அட்டையுடன் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை, செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம், நீக்கப்பட்டதற்கான காரணங்களுடன், மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் விண்ணப்பிக்கும் முறை, எளிய மக்களும் பயன்பெறும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

முன்னதாக, இறந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு முன்பு, ஏன் அதை பொது வெளியில் வெளியிடவில்லை என்று தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.

இந்த நிலையில்தான், 65 லட்சம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட்டுள்ளது. மேலும், பிகாரில் மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? யார்? என்னென்ன காரணங்களுக்காக நீக்கப்பட்டனர் என்றும் கேட்டிருக்கிறது. 4 நாள்களில் இணையதளத்தில் வெளியிடுமாறு உத்தரவிட்டு, பிகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த முறை மேற்கொள்வதை எதிர்த்த மனு மீதான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!