முறை தவறிய உறவில் இருந்தவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பிள்ளைகளுடன் ரயில்வே பெண் காவலர் மதுரை அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் சாத்தூர் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட ரயில்வே தலைமை காவலர். முறை தவறிய நட்பால் அடுத்தடுத்து இரு ரயில்வே போலீசார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் 40 இவரது மனைவி ஜெயலட்சுமி 37 இவர் மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயலட்சுமி திருச்சி ரயில்வே காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது இதனால் ஜெயலட்சுமி மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி தனது மகள் பவித்ரா ( 11 )காளிமுத்து (9 ) ஆகிய இரு பிள்ளைகளுடன் நேற்று மாலை சோழவந்தான் தொகுதி தேனூர் அருகே மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் . ரயில் மோதிய வேகத்தில் மூன்று பேரின் உடல்களும் துண்டு துண்டாக சிதறியது.சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் இறந்த மூன்று பேர்களின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஜெயலட்சுமிக்கு திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட நிலையில் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜெயலட்சுமிக்கும் இதேபோல் அங்கு பணியாற்றிய தலைமை காவலர் கோவில்பட்டியை சேர்ந்த சொக்கலிங்க பாண்டியன் 50 என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் நெருக்கமாக பழகி வந்த விவகாரம் கணவர் சுப்புராஜுக்கு தெரிய வரவே அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. தலைமை காவலர் சொக்கலிங்க பாண்டியனுக்கும் ஏற்கனவே உறவுக்கார பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்து வந்த நிலையில் சொக்கலிங்க பாண்டியன் அடிக்கடி பெண்களுடன் செல்போனில் பேசி வருவதாக கூறி இவரது மனைவி தகராறில் ஈடுபட்டு விவகாரத்து பெற்று சென்று விட்டதாகவும் இதனால் தனியாக இருந்த சொக்கலிங்க பாண்டியன் ஜெயலட்சுமியுடன் நெருக்கமாக பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சொக்கலிங்க பாண்டியன் திடீரென தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில்வே காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையிலும் ஜெயலட்சுமி மதுரையிலும் இருந்ததால் இருவருக்குமான தொடர்பில் இடைவெளி அதிகரித்தது.
இந்த நிலையில் சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அறிந்த ஜெயலட்சுமி சொக்கலிங்க பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இருவரும் அடிக்கடி செல்போனில் வாக்குவாதம் செய்த நிலையில் நேற்று முன்தினம் சொக்கலிங்க பாண்டியன் மதுரையில் உள்ள ஜெயலட்சுமி வீட்டிற்கு வந்து வாக்குவாதம் செய்ததில் இருவருக்கும் கைகலப்பாகி உள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட சண்டையை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சொக்கலிங்க பாண்டியன் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததில் இருவருக்குமான கள்ளத்தொடர்பு பகுதி முழுவதும் தெரிய வரவே கணவனை பிரிந்தும் கள்ளக்காதலன் ஏமாற்றியதாலும் சம்பவத்தை அவமானமாக கருதிய ஜெயலட்சுமி இனி இந்த உலகத்தில் வாழ கூடாது என தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ரயில் முன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஜெயலட்சுமி தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த சொக்கலிங்க பாண்டியன் போலீஸ் விசாரணைக்கு பயந்து இன்று அதிகாலை கோவில்பட்டியில் இருந்து கார் மூலமாக சாத்தூர் அருகே சின்னக் கொல்லப்பட்டி பகுதியில் சென்னை – திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்தில் சொக்கலிங்க பாண்டியன் தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் உடலை கைப்பற்றிய தூத்துக்குடி ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சொக்கலிங்க பாண்டியன் உடலை அனுப்பி வைத்தனர். இரண்டு தற்கொலை சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கணவனைப் பிரிந்தும், கள்ளக்காதலனும் ஏமாற்றிய நிலையில் தனது இரண்டு பிள்ளைகளுடன் ரயில்வே பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து ரயில்வே தலைமை காவலராக பணியாற்றி வரும் கள்ளக்காதலன் சொக்கலிங்க பாண்டியனும் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இரண்டு போலீசாருக்கு இடையே ஏற்பட்ட முறை தவறிய நட்புக்கு ஏதும் அறியாத இரண்டு அப்பாவி குழந்தைகளும் பலியாகிய சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









