“விடா முயற்சியே வெற்றி தரும்” எனும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கூற்றினை உண்மையாக்கி உள்ளார் சாதனை பெண் ஆசிரியை ஹசினா. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பூலாங் குடியிருப்பு பகுதியில் பிறந்தவர் ஆசிரியை ஹஸினா. திருமணமாகி வடகரை பகுதியில் வசித்து வந்த நிலையில், இடைநிலை ஆசிரியர் படிப்பை முடித்தார். தனது ஆசிரியர் பணியோடு அரசு தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளான குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளை தொடர்ந்து எழுதி வந்தார். மூன்று குழந்தைகளுக்கு தாயான பின்னரும் முயற்சியை கைவிடாமல் செங்கோட்டை அரசு நூலகத்தில் சென்று படிப்பது, மாதிரி தேர்வுகளை எழுதுவது, ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பது போன்ற பல்வேறு தளங்களில் தனது அரசு தேர்விற்கான பயிற்சியினை மேற்கொண்டார் ஹசினா.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று வக்பு ஆய்வாளராக கோவையில் பணி அமர்த்தப்பட்டார். அப்பணி கிடைத்த சில மாதங்களிலேயே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்விலும் வெற்றி பெற்று இடைநிலை ஆசிரியர் பணியும் தற்போது கிடைக்கப் பெற்றது. சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் இடைநிலை ஆசிரியர் பணி நியமன ஆணையை வழங்கினார். தனது விடா முயற்சி மற்றும் அயராத உழைப்பால் 2 அரசு பணியினை வென்று தற்போது வக்பு ஆய்வாளர் பணியிலிருந்து மாறுதல் பெற்று இடைநிலை ஆசிரியர் பணியினை தொடர உள்ளார். அவரது கல்விப் பணி சிறக்க பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், கீழை நியூஸ் செய்தி குழுமம் ஆசிரியை ஹசினாவின் கல்வி பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறது.
செய்தியாளர்- அபுபக்கர்சித்திக்