ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட ‘பனையடியேந்தல்’ ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்தப்பள்ளி கடந்த 03-11-2021 அன்று 1.62 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தரமற்ற முறையில் இந்த கட்டிடப் பணி நடந்துள்ளதால் அவ்வப்போ கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து மாணவ மாணவிகள் காயம் அடைந்து வருகின்றனர்.
புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தின் சுவரில் கை வைத்தாலே சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தரமற்ற பணியே இதற்கு காரணம் எனவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், இன்று பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து இரண்டு மாணவர்கள் தலையில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் திரண்டு பள்ளிக்கு வெளியே வந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
தரமற்ற பணியால் புதிய கட்டிடத்தின் சுவர்களை கையால் தட்டினாலே சிமென்ட் பூச்சு உதிர்ந்து விழுவதாக கூறப்படுகிறது. இதனால், கட்டிடத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாக மாறியுள்ளதால், தரமற்ற முறையில் கட்டுமான பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளை கண்டித்தும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அந்த பள்ளி கட்டிடம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து ஆவேசமடைந்த பெற்றோர்களும் மாணவர்களின் உறவினர்களும் கூறுகையில், 1 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட பள்ளி கட்டிடம் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் வலுவிழந்து இடிந்து விழுவதால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. வகுப்பறையில் அமர்ந்து பாடம் நடத்துவதை கவனிப்பார்களா, எப்போது இடிந்து விழும் என மேலே பார்த்துக் கொண்டிருப்பார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதுமட்டுமின்றி தரமட்ட இந்த பள்ளி கட்டிடத்தை முற்றிலும் அகற்றிவிட்டு புதிதாக தரமான வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
You must be logged in to post a comment.